மூளை சுமையை அளக்கும் நவீன மின்னணு பட்டை!
மனித மூளை, வேலைப்பளு காரணமாக, அறிவாற்றல் சோர்வைச் சந்திக்கிறது. இதை 'காக்னிடிவ் ஃபாடீக்' என உளவியலாளர்கள் அழைக்கின்றனர். இதை அளக்க முடிந்தால், தனிநபரின் மனநலத்தை மேம்படுத்த முடியும். எனவே, அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலை ஆராய்ச்சியாளர்கள், மூளைச் செயல்பாட்டைக் கண்காணித்து, அறிவாற்றல் சோர்வை நிகழ்நேரத்தில் கணிக்கும் புதுமையான 'மின்னணுப் பட்டை'யை (e-tattoo) உருவாக்கியுள்ளனர்.மிக மெல்லிதாகவும், வளையும் தன்மையுடனும் இருக்கிறது இந்தப் பட்டை. நெற்றி மற்றும் கன்னத்தின் மீது கச்சிதமாக இதை ஒட்டிக்கொள்ளலாம். மின்மூளை வரைபடம் (EEG) மற்றும் விழியசைவு மின் அலைப் பதிவு (EOG) ஆகியவற்றின் மூலம் மூளை அலைகள் மற்றும் கண் அசைவுகளை இக்கருவி நிகழ்நேரத்தில் கண்காணிக்கிறது. வழக்கமான ஈ.ஈ.ஜி. கருவிகள், பருமனாகவும், அதிக விலையும் கொண்டவை. இவற்றை மருத்துவ ஆய்வகத்தில்தான் பயன்படுத்த முடியும். ஆனால், இந்தப் பட்டைக் கருவி இலகுவாகவும், விலைகுறைவாகவும் இருப்பதோடு, இதை எங்கும் அணியலாம். மேலும் இது தொடர்ந்து ஒருவரது மூளையின் செயல்பாட்டை மதிப்பீடு செய்யும்.அதிக நினைவாற்றல் தேவைப்படும் சோதனைகளில், மன உழைப்பு மற்றும் சோர்வு அதிகரிப்பதை, இந்தப் பட்டை துல்லியமாகக் காட்டியது. 'மூளை உச்ச பட்ச செயல்திறனுடன் செயல்பட, மன உழைப்பை சமநிலையில் வைப்பது அவசியம்' என்கிறார் ஆராய்ச்சியாளர் நான்ஷு லுா. விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர், மருத்துவர் போன்ற அதிக மன அழுத்தம் மிக்க பணியாளர்களுக்கு இது மிகவும் பயனளிக்கும்.மேலும், தனிநபர்கள் தங்கள் மனநலத்தை சுயமாகக் கண்காணிக்கவும், முன்கூட்டியே நிர்வகிக்கவும் இது ஒரு முக்கிய கருவியாக அமையும்.