தொலைநோக்கியில் சிக்கிய விண்வெளி விசித்திரம்!
சனிக் கோளின் நிலவான டைட்டனுக்கும், குள்ளக் கிரகமான புளூட்டோவுக்கும் இடையே ஒரு வினோத ஒற்றுமையை விஞ்ஞானிகள் கண்டுள்ளனர். நாசாவின் 'ஜேம்ஸ் வெப்' விண்வெளி தொலைநோக்கி மூலம் கிடைத்த அகச்சிவப்பு தரவுகளின்படி, இவை இரண்டின் நிறமாலையிலும் 5.11 மைக்ரோ மீட்டர் அலைநீளத்தில் மர்மமான வகையில் ஒரு 'ஒளி உறிஞ்சுதல்' நிகழ்வது கண்டறியப்பட்டுள்ளது. விண்வெளி ஆய்வாளர் புருனோ பெஸார்ட் தலைமையிலான விஞ்ஞானிகள் குழு, தொலைநோக்கியின் இரு வேறு கருவிகள் வாயிலாக இந்த சமிக்ஞையைத் தனித்தனியாகப் பதிவு செய்திருந்தது. எனவே, இது கணினி பிழை அல்ல; உண்மையான விண்வெளி நிகழ்வு தான் என்பதை விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தினர். விஞ்ஞானிகளின் இந்த குழப்பத்திற்கு ஒரு முக்கியக் காரணம் இருக்கிறது. அளவிலும், வெப்பநிலையிலும் முற்றிலும் மாறுபட்ட இந்த இரண்டு உலகங்களும், பல பில்லியன் கிலோமீட்டர் தொலைவில் உள்ளன. ஆனால், இவை இரண்டுமே மீத்தேன் கலந்த, நைட்ரஜன் நிறைந்த வளி மண்டலத்தைக் கொண்டுள்ளன என்பது மட்டுமே பொதுவான அம்சம். ஆய்வகங்களில் நன்கு அறியப் பட்ட பனிக்கட்டி வகைகள் மற்றும் கரிம சேர்மங்கள் வெளியிடும் ஒளிக்கற்றைகளுடன், ஜேம்ஸ் வெப் பதிவு செய்த இந்த மர்ம ஒளி உறிஞ்சித் தரவுடன் விஞ்ஞானிகள் ஒப்பிட்டு பார்த்தனர். ஆனால், பூமியில் உள்ள எந்தவொரு வேதியியல் பொருளுடனும் இது பொருந்தவில்லை! ஜேம்ஸ் வெப் பதிவு செய்த இந்த நிறமாலையின் மர்மமான அம்சம் மேலும் உறுதிசெய்யப்பட வேண்டும். அப்படி உறுதியானால், சூரிய குடும்பத்தின் தொலைதூரப் பகுதிகளில் நிலவும் கடுங்குளிரில், சிக்கலான கரிம மூலக்கூறுகள் எவ்வாறு உருவாகின்றன என்ற புதிய வேதியியல் உண்மையை அது வெளிச்சமிட்டுக் காட்டும். விண்வெளியின் இந்த மர்ம சேர்மத்தை துல்லியமாகக் கண்டறிய, கூடுதல் ஆய்வகச் சோதனைகளும் தற்போது தேவைப்படுகின்றன. இந்த மர்ம முடிச்சு அவிழ்ந்தால், சூரியக் குடும்பத்தின் வேதியியல் பட்டியலில் ஒரு புதிய பக்கமே எழுதப்படும்!