ரத்தத்தில் தெரியும் வயது
மனித உடலில், வயோதிகம் ஏற்படுத்தும் மாற்றங்களை தொடர்ந்து விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர். இந்தத் தேடலின் ஒரு பகுதியாக, மனித ரத்த ஸ்டெம் செல்கள், முதுமையில் எப்படி மாற்றம் அடைகின்றன என்பதைப் புரிந்துகொள்ள உதவும், ஒரு புதிய கண்டுபிடிப்பை, பார்சிலோனாவில் உள்ள மரபணு ஒழுங்கு முறை மையம் (CRG) மற்றும் பயோமெடிசின் ஆராய்ச்சி நிறுவனம் (IRB) ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள் நிகழ்த்தியுள்ளனர். தொடர்ந்து பிரிந்து வளரும் ஸ்டெம்செல்கள், ரசாயன 'பார்கோடு' போல சில தடயங்களை விட்டுச் செல்கின்றன. இந்த 'பார்கோடு' களை விஞ்ஞானிகள் பகுப்பாய்வு செய்தபோது, ஒரு முக்கியமான உண்மையைக் கண்டறிந்தனர். அதாவது, 50 வயதிற்குப் பிறகு, ரத்த உற்பத்தி சில குறிப்பிட்ட குளோன்களின் (clones) ஆதிக்கத்திற்கு உட்படுகிறது. இந்த குளோன்களின் பெருக்கம், ரத்தத்தின் பன்முகத்தன்மையைக் கணிசமாகக் குறைத்து, நாள்பட்ட அழற்சி (chronic inflammation) காரணமாக நோய்களுக்கு ஆளாகும் வாய்ப்பை அதிகரிக்கிறது. இந்த குளோன் ஆதிக்கம், மனிதர்களிலும் எலிகளிலும் காணப்பட்டது. இதுதான் ரத்தம் முதுமையடைவதன் அடிப்படை அம்சமாக இருக்கக்கூடும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.'நேச்சர்' இதழில் வெளியான இந்த ஆய்வு, நோய்களை முன்கூட்டியே கண்டறியவும், செல்களுக்குப் புத்துயிரூட்டும் சிகிச்சை முறைகளை (rejuvenation therapies) உருவாக்கவும் உதவக்கூடும் என்று முதுமைப் பிணியியல் வல்லுநர்கள் கணித்துள்ளனர். அறிவியலின் இந்த முன்னேற்றம், ஆரோக்கியமான முதுமைக்கான புதிய வழிகளைத் திறக்கக்கூடும்.