கொண்டைக்கடலை நல்லது
பொதுவாக நீரிழிவின் ஆரம்ப நிலையில் இருப்பவர்களுக்கு உடலில் கெட்ட கொழுப்பின் அளவு அதிகரிக்கும், சில விதமான அழற்சி ஏற்படும். கெட்ட கொழுப்பு அதிகரிப்பது இதய நோய்களுக்கு இட்டுச் செல்லும். இதைச் சரி செய்யும் ஆற்றல் கொண்டைக் கடலை, கருப்பு பீன்ஸ் ஆகியவற்றுக்கு இருக்கிறது என்கிறது சமீபத்திய ஆய்வு. அமெரிக்காவின் இலினாய்ஸ் தொழில்நுட்பக் கழகம் இது தொடர்பாக நீரிழிவின் ஆரம்ப நிலையில் இருந்த 72 பேரை 12 வாரம் தொடர்ந்து ஆய்வு செய்தது. கொண்டைக் கடலை, கருப்பு பீன்ஸ் ஆகியவை உடலுக்கு நன்மை செய்பவை என்று பரவலாக உண்ணப்படுகின்றன என்றாலும் இப்படியாக நீரிழிவுடன் தொடர்புப்படுத்தப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப் பட்டதில்லை. 72 பேரில் ஒரு பிரிவினருக்குக் கொண்டைக் கடலையும், மற்றொரு பிரிவினருக்குக் கருப்பு பீன்ஸும், இன்னுமொரு பிரிவினருக்கு அரிசிச் சாதமும் கொடுக்கப்பட்டது. அரிசி உண்டவர்களை விடக் கொண்டைக் கடலை, கருப்பு பீன்ஸ் உண்டவர்களுக்குக் கெட்ட கொழுப்பும், அழற்சியும் குறைந்திருப்பது தெரியவந்தது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், இவை இரண்டும் ரத்த சர்க்கரை அளவைக் கூட்டவோ, குறைக்கவோ இல்லை. எனவே மாலை நேரச் சிற்றுண்டியாக இவற்றைச் சாப்பிடலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.