வேதியியலுக்கு வேலை செய்யும் டி.என்.ஏ.!
வாழ்க்கைத் தகவல் களின் பெட்டகம் என்று பெயர் பெற்றது டி.என்.ஏ., மூலக்கூறு. அதை, ஒரு வேதியியல் கருவி யாகவும் பயன்படுத்தலாம் என்கின்றனர் சிங்கப்பூர் தேசியப் பல்கலை ஆய்வாளர்கள். அதற்கு அவர்கள் பயன்படுத்தியது, டி.என்.ஏ.,வின் பாஸ்பேட் முதுகெலும்பை. இது முன்பு செயலற்றதாகக் கருதப்பட்டது. ஆனால், அதையே வேதியியல் வினையூக்கி போலவும் செயல்பட வைப்பதில், சிங்கப்பூரைச் சேர்ந்தவர்கள் வெற்றி கண்டுள்ளனர் . இந்த பாஸ்பேட்டுகள், தண்ணீரில் இருக்கும்போது எதிர் மின்னேற்றம் கொள்கின்றன. அப்போது, இதனுடன் வினையாற்றக்கூடிய வேதிப் பொருட்களை ஈர்த்து, அவற்றை ஒரு குறிப்பிட்ட வேறு வேதிப்பொருளாக மாறும்படி வழிநடத்துகின்றன. இதனால், விஞ்ஞானிகள் விரும்பக்கூடிய சில வேதிப் பொருட் களை உருவாக்க முடியும். 'நேச்சர் கேட்டலிஸ்' இதழில் வெளிவந்த இந்த ஆய்வின் படி, ஆராய்ச்சியாளர்கள் 'பி.எஸ்- - ஸ்கேனிங்' என்ற ஒரு புதிய முறையை உருவாக்கி, இதை சாதித்துள்ளனர். இந்த முறை, எந்த பாஸ்பேட்டுகள் வினைத்திறன் மிக்கவை என்பதைக் கண்டறிய உதவுகிறது. இதுவரை, டி.என்.ஏ-.,வை, மரபணு குறியீடுகள் அச்சிடப் பட்ட பக்கங்களாகவோ, அதேபோல இன்னொன்றை பிரதி எடுக்க உதவும் கருவியா கவோதான் பலரும் பயன் படுத்தினர். அதற்கு மாறாக, பி.எஸ். - ஸ்கேனிங் முறை, சீரற்ற வேதிவினைகளை, சீராக நடக்க உதவும் சாரம் போல பயன்படுத்த உதவுகிறது. இந்த திருப்புமுனை ஆய்வு, ஒரு பசுமையான எதிர்காலத்தை உருவாக்கும் என ஆய்வாளர்கள் கணிக்கின்றனர். அதாவது, பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட டி.என்.ஏ.,க்கள் சுற்றுச்சூழலுக்கு கேடில்லாத, நீர் சார்ந்த புதிய வேதிப் பொருட்களை பெருமளவில் உற்பத்தி செய்ய உதவும்.