உள்ளூர் செய்திகள்

கடலுக்குக் கீழே குடிநீர்!

நமது பூமி முக்கால் பங்கு நீரால் சூழப்பட்டது என்றாலும் கூட, உலகில் உள்ள மொத்த நீரில் வெறும், 2.5 சதவீதம் மட்டுமே நம்மால் பயன்படுத்தத் தக்க நன்னீர், மீதம் 97.5 சதவீதம் உப்பு நீர் தான்.பல நாடுகளில் பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதில்லை. இந்தச் சூழலில் தான் கடலுக்குக் கீழே நன்னீர் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த நன்னீரின் அளவு ஓராண்டில் சூரியனால் ஆவியாகும் பூமியின் மொத்த நீரை விட அதிகம்.அமெரிக்காவில் உள்ள 'உட்ஸ் ஹோல்' கடலாய்வு நிறுவனத்தைச் சேர்ந்த இரு விஞ்ஞானிகள் இங்கிலாந்தின் கண்டத்தட்டை ஆய்வு செய்தபோது, கடலுக்குக் கீழ் நன்னீர் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். நன்னீரை கண்டுபிடிக்க, கடல் மீது செல்லும் கப்பல்களில் இருந்து மின்காந்த அலைகளைக் கடல் தரை நோக்கிச் செலுத்துவர். மின்காந்த அலைகளை உப்பு நீர் நன்றாகக் கடத்தும், நன்னீர் கடத்தாது. இதைக் கொண்டு எது நன்னீர், எது உப்பு நீர் என்பதை எளிதில் அறிய முடியும்.பனிக்காலத்தில் கடல் மட்டம் குறைவாக இருந்தது. அப்போது தரையில் இருந்த நன்னீர் பனியாறு கடல் மட்டம் உயர்ந்தபோது கடல்தரையின் கீழேயே தங்கி இருந்திருக்க வேண்டும். இதுவே இப்போது கடல்தரைக்குக் கீழே நன்னீர் கிடைக்கக் காரணம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.கடலடி நன்னீரைக் கொண்டு கச்சா எண்ணெய்யை வெளியே எடுக்க முடியுமா என்று எண்ணெய் நிறுவனங்கள் ஆராய்ந்து வருகின்றன. உலகின் வேறு கடற்பகுதிகளில் உள்ள நன்னீரை எவ்வாறு கண்டுபிடிப்பது, கண்டுபிடித்த பின் அந்த நீரை எவ்வாறு வெளியே பயன்பாட்டிற்கு எடுப்பது, அவ்வாறு எடுப்பதினால் என்னென்ன சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படும் என்று கடல்சார் விஞ்ஞானிகள், புவியியலாளர்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !