உள்ளூர் செய்திகள்

மகிழ்ச்சி ஏற்படுத்தும் உணவு

சத்துமிக்க உணவை உட்கொள்ளும்போது நமது மூளை செரடோனின் எனும் வேதிப் பொருளை உற்பத்தி செய்வதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இது உற்பத்தி ஆகும்போது மகிழ்ச்சி ஏற்படுகிறது. பொதுவாகவே நமது மூளை ஒவ்வொரு சூழலுக்கு ஏற்றபடியும் ஒருவிதமான வேதிப்பொருட்களைச் சுரக்கும். இப்படியான சுரப்பு மனிதர்களுக்கு மட்டுமன்றி விலங்குகள், பூச்சிகளில் கூட நிகழ்கிறது. இதுவே மனிதர்கள், விலங்குகளை அந்தப் குறிப்பிட்ட உணவைத் தொடர்ந்து உண்ண வைக்கிறது.ஜெர்மனியைச் சேர்ந்த போன் பல்கலை, இங்கிலாந்தைச் சேர்ந்த கேம்பிரிட்ஜ் பல்கலை ஆகியவை இணைந்து மேற்கொண்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது. உணவை விழுங்கும் வேளையில் மூளைக்கும் உணவுக்குழாய்க்கும் இடையே தகவல் பரிமாற்றம் நடக்கிறது. இது பற்றி ஆராய பல கோடி நியூரான்கள் உடைய மனித மூளையை எடுத்துக் கொண்டால் சிக்கல். இதனால் 10,000 - 15,000 நியூரான்கள் மட்டுமே உடைய ஈக்களின் மூளையை விஞ்ஞானிகள் எடுத்துக் கொண்டனர். அதில் செரடோனின் உற்பத்தி செய்யும் ஆறு நியூரான்களை மட்டும் கூர்ந்து ஆய்ந்தனர். நல்ல சத்துள்ள உணவு கிடைத்ததும் செரடோனின் உற்பத்தியானது. இது மகிழ்ச்சியான உணர்வைக் கொடுக்கவே அந்த ஈ தொடர்ந்து உணவை உண்டது. இதேபோல் தான் மனித உடலிலும் நடக்கிறது என்கின்றனர் விஞ்ஞானிகள். இந்தக் கண்டுபிடிப்பு வாயிலாக உணவு உண்பது தொடர்பாக மனிதர்களுக்கு உள்ள குறைபாடு, நோய்களைக் குணப்படுத்த முடியும். ஆனால் அதற்கு இன்னும் நிறைய ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !