நகரங்களுக்குள் வனங்கள்
உலகின் சராசரி வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. சென்ற 2023ம் ஆண்டு தான், இதுவரை உலக வரலாற்றிலேயே மிக வெப்பமான ஆண்டாகப் பதிவானது.இத்தகைய சூழலில் நாம் வாழும் கான்கிரீட் காடுகளின் வெப்பநிலையைக் குறைக்கச் சிறந்த வழி காடுகளை உருவாக்குவது தான் என்கின்றனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.நகரத்திற்கு நடுவே காடுகளை உருவாக்குவது சுலபமல்ல. தாவரவியல் பூங்காக்களை உருவாக்குவது நகரத்தின் வெப்பநிலையை, 5 டிகிரி செல்சியஸ் வரை குறைக்கும் என இங்கிலாந்தைச் சேர்ந்த சர்ரே பல்கலை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.தோட்டங்கள், நகரப் பூங்காக்கள் முறையே 4.5, 3.8 டிகிரி செல்சியஸ் வெப்பத்தைக் குறைக்கின்றன. இவை எவற்றையும் உருவாக்க முடியாவிட்டாலும், சாலையின் இருபுறமும் மரங்களை நடுவதால், 3.8 டிகிரி வெப்பத்தைக் குறைக்க முடியும்.சிறுசிறு நீர்த்தேக்கங்களை ஏற்படுத்துவது குளிர்ச்சியான சூழலை உருவாக்கும். மரங்கள் அடர்த்தியாக இருந்தால் தரையில் விழும் வெப்பத்தை அவை தடுத்து நிறுத்தும், ஈரப்பதத்தையும் வெளியிடும். இதனால் புதிய நகரங்கள் உருவாக்கும்போது, தாவரங்களுக்கு அதிகமான இடத்தை ஒதுக்குமாறு ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.