வந்துவிட்டது இந்தியாவின் முதல் தானோட்டி ஆட்டோ
இந்தியாவில் முதல் 'தானோட்டி' வாகனம் சாலைக்கு வந்தேவிட்டது. அதை சாதித்திருப்பது டில்லியைச் சேர்ந்த ஒரு ஆட்டோ நிறுவனம் தான். ஏற்கனவே இந்த நிறுவனம் தயாரித்து வந்த மின்சார ஆட்டோவில், தானோட்டி தொழில்நுட்பத்தை இணைத்து, 'சுயம்கதி' என்ற தானோட்டி ஆட்டோவாக வெளியிட்டிருக்கிறது. பயணியருக்கான தானோட்டி ஆட்டோவின் விலை 4 லட்சம் ரூபாய். ஒரு தடவை சார்ஜ் செய்தால் 120 கி.மீ., துாரம் ஓடும். சுயம்கதி, சுயமாக ஓடுவதற்கான 'அட்டானமஸ் டிரைவிங்' நுட்பத்தில் பெரும் பங்கு வகிப்பது, மென்பொருள் தான். அதை, ஒரு பெங்களூரு நிறுவனத்திடம் இந்த நிறுவனம் ஆட்டோ வாங்கியிருக்கிறது. 'டிரைவர்லெஸ்' நுட்பத்தின் வன்பொருட்களான காட்சி உணரிகள், தடை உணரிகள் போன்ற உதிரிபாகங்கள் 'மேக் இன் இந்தியா'விலேயே கிடைக்கின்றன. ஆனால், லிடார் என்கிற லேசர் கதிர் மூலம் இடவலம், முன்பின் உணரும் கருவி நிச்சயம் இறக்குமதி தான். ஒரு நகரின் மொத்த சாலைகளையும் மனப்பாடம் செய்து, நெரிசல் இல்லா சாலையை தேர்ந்தெடுத்து, பயணியருடன் பேசியபடியே ஓட்டும் சாதுரியம் சுயம்கதி ஆட்டோவுக்கு இன்னும் வரவில்லை. ஆனால், அதுவரை விமான நிலையம், மால்கள், தொழில் பூங்காக்கள் போன்ற வளாகங்களுக்குள் வருவோரை சுமந்து செல்ல சுயம்கதி பயன்படுத்தப்படும்.