உள்ளூர் செய்திகள்

பூச்சி உணரி தொழில்நுட்பம்

பூச்சிகளுக்கு மீசை போல நீட்டிக் கொண்டிருக்கும் உணர் கொம்புகளில் ஏகப்பட்ட நுட்பங்களை இயற்கை புதைத்து வைத்துள்ளது. அதை தீவிரமாக ஆராய்ந்த சீனாவின் ஷெஜியாங் பல்கலை விஞ்ஞானிகள், அதேபோன்ற நுண்ணிய 'ஆப்டிகல் ஆன்டெனா'வை உருவாக்கியுள்ளனர்.இது தொடுதலை உணர்தல், ஒலி உணர்தல் மற்றும் ரசாயன மாற்றங்களை உணர்தல் ஆகியவற்றை ஒரே நேரத்தில் செய்யும் திறன் கொண்டது. பாலிமர் பூசப்பட்ட நுண்ணிய இழைகள் வாயிலாக, வெளிப்புறத் துாண்டுதல்களை இது ஒளி சமிக்ஞைகளாக மாற்றுகிறது. மிகக் குறைந்த மின்சாரத்தில், அதிவேகமாகச் செயல்படுவது இதன் சிறப்பு. பறக்கும் மற்றும் ஊர்ந்து செல்லும் சிறிய ரோபோக்களில் இதைப் பொருத்த முடியும்.இதன் வாயிலாக, ரோபோக்கள் தங்கள் சூழலைத் துல்லியமாக உணர முடியும். தற்போதைய ரோபோக்களில் உள்ள சென்சார் இடப்பற்றாக்குறை மற்றும் ஆற்றல் விரயப் பிரச்னைகளுக்கு இது ஒரு சிறந்த தீர்வாகும். பேரிடர் கால மீட்புப் பணிகள் மற்றும் ஆய்வுகளுக்கு இது பெரிதும் உதவும். 'பயோமிமிக்ரி' எனப்படும் இயற்கையை நகலெடுக்கும் முறையில் இத்தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது. வருங்கால ரோபோக்களின் சுற்றுப்புற உணர் திறனை, ஏறத்தாழ, அசல் உயிரினங்களுக்கு நிகராக இந்த கண்டுபிடிப்பு உயர்த்தும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !