அண்டம் விரிவடையும் வேகம் குறைகிறதா?
நம் பேரண்டம் அதிவேகமாக விரிவடைந்து கொண்டே போவதாக அண்டவியலாளர்களில் ஒரு தரப்பினர் வாதிடுகின்றனர். ஆனால், அண்டம் விரிவடையும் வேகம், ஏற்கனவே குறைந்து கொண்டிருக்கலாம் என்கின்றனர் தென்கொரியாவின் யோன்சே பல்கலை ஆராய்ச்சியாளர்கள். நீண்ட காலமாக, அண்டம் விரிவடையும் வேகத்தை கணக்கிடும் அளவுகோலாக, '1-ஏ வகை சூப்பர்நோவா' எனப்படும் மீயொளிர் விண்மீன் வெடிப்பிலிருந்து பெறப்பட்ட தரவுகளை விஞ்ஞானிகள் பயன்படுத்தினர். தென்கொரிய விஞ்ஞானிகள், அந்தத் தரவுகளை மீண்டும் பகுப்பாய்வு செய்து, அந்த அளவீடுகளில் பிழை உள்ளதாக வாதிடுகின்றனர் . இந்த ஆய்வு முடிவு, தீராத, எப்போதும் விலக்கும் ஆற்றல் கொண்ட இருண்ட ஆற்றல் (Dark energy) பேரண்டத்தில் உள்ளது என்ற கருத்தை பலவீனப்படுத்துகிறது. மாறாக, இந்த புதிய ஆதாரம் இருண்ட ஆற்றலின் தாக்கம் காலப்போக்கில் பலவீனமடைந்து வருகிறது என்கிறது. இது உண்மையாக இருந்தால், அண்டத்தின் புரிதலுக்கு அடிப்படையாக இருக்கும் அண்டவியல் மாதிரி (cosmological model) திருத்தப்பட வேண்டியிருக்கும். இந்த முடிவுகள் இருபது ஆண்டுகளுக்கும் மேலான ஒருமித்த கருத்துக்கு சவால் விடுகின்றன. மேலும், சில ஆய்வாளர்கள் தற்கா லிகமாக முன்வைத்த புள்ளியியல் திருத்தங்களின் அடிப்படையிலேயே இந்த ஆய்வு முடிவுகள் இருக்கின்றன. ஆயினும், இதன் தாக்கங்கள் ஆழமானவை. பேரண்டம் விரிவடையும் வேகம் குறைகிறது என்றால், அது இறுதியில் சுருங்கவும் கூடும். இது 'பெருஞ்சுருக்கம்' (Big Crunch) போன்ற ஒரு நிகழ்வுக்கு வழி வகுக்கலாம். இது அண்டத்தின் கடந்த காலம் மற்றும் அதன் எதிர்காலம் பற்றிய நம் சொல்லாடல்களை தலைகீழாகத் திருப்பிப்போடும் ஒரு கண்டு பிடிப்பாகும்.