உள்ளூர் செய்திகள்

பல்லாண்டு வளரும் நெற்பயிர்

மறுமுறை நடவு செய்யத் தேவையில்லாமல், ஆண்டுதோறும் தானாகவே வளரக்கூடிய 'பல்லாண்டு நெல்' (Perennial rice) ரகத்தை உருவாக்குவதில் விஞ்ஞானிகள் முன்னேற்றம் கண்டுள்ளனர். பிலிப்பைன்சிலுள்ள சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனமும் சீனாவின் யுன்னான் வேளாண் அறிவியல் அகாடமியும் இணைந்து இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளன. காட்டு ரக நெல்லின் நிலைத்தன்மையையும், அதிக மகசூல் தரும் நவீன ரகங்களின் மரபணுப் பண்புகளையும் ஒருங்கிணைப்பதுதான் இந்த ஆய்வின் நோக்கம். ஒரே போகத்தோடு அழியாமல், பல ஆண்டுகளுக்கு தழைத்து, விளைச்சல் தர உதவும் மரபணுக்களை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். காட்டு நெல் ரகங்களின், நிலத்தடி வேர்த் தண்டுகள் மீண்டும் துளிர்க்கும் திறன் கொண்டவை. அந்தத் திறனை புதிய நெல் ரகத்திற்கு கொடுப்பதன் வாயிலாக, விவசாயிகள் ஒவ்வொரு முறையும் நிலத்தை தயார் செய்து நாற்று நட வேண்டிய அவசியம் இருக்காது. இது உழைப்பு மற்றும் இடுபொருட்களுக்கான செலவையும் வெகுவாகக் குறைத்து, விவசாயிகளுக்குச் சீரான லாபத்தை உறுதி செய்யும். சுற்றுச்சூழல் ரீதியாக, இத்தகைய பல்லாண்டுப் பயிர்கள் மண்ணின் வளத்தை மேம்படுத்தும். நிலத்தில் எப்போதும் வேர்கள் படர்ந்து இருப்பதால் மண் அரிப்பு தடுக்கப்பட்டு, மண்ணின் நீடித்த வளத்தன்மை பாதுகாக்கப்படுகிறது. உழைப்பு அதிகம் கோரும் நெல் விவசாயத்தை, நிலையான மற்றும் மீள்திறன் கொண்ட ஒரு நவீன கட்டமைப்பாக இது மாற்றக்கூடும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இது உலகளாவிய உணவுப் பாதுகாப்பில் ஒரு புரட்சிகரமான மாற்றத்திற்கு வித்திடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !