கடலில் மட்கும் நெகிழி
கடலிலே கரையக்கூடிய பிளாஸ்டிக்கை ஜப்பானைச் சேர்ந்த ரிக்கென் ஆய்வு மைய விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர்.உணவுப் பொருட்களில் பயன்படும் சோடியம் ஹெக்ஸா மெட்டா பாஸ்பேட், உரத்தில் பயன்படும் குவானிடியம் அயனிகள் இரண்டையும் இணைத்து ஒரு புதுக் கலவையை விஞ்ஞானிகள் உருவாக்கினர். இதை வேண்டிய வடிவில் திரட்டி, தேவைப்பட்ட பொருட்களைச் செய்யப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்தக் கலவையைக் கொண்டு செய்யப்படும் பொருட்கள் அப்படியே பிளாஸ்டிக் போலவே இருக்கும். எளிதில் தீப்பிடிக்காது, நிறமற்றதாக, ஒளிபுகக் கூடியதாக இருக்கும். உப்புத் தண்ணீரில் போட்டு விட்டால் எட்டரை மணி நேரத்தில் கரைந்துவிடும். எனவே இது வழக்கமான பிளாஸ்டிக்கை விட மிகவும் நல்லது.இந்தக் கலவையால் செய்யப்பட்ட குவளைகள் அல்லது தண்ணீர்ப் பாத்திரங்களில் தண்ணீர் ஒட்டாத வகையில் சில வேதிப் பொருட்களைப் பூசி விடுவார்கள். இதனால், இவற்றில் ஊற்றப்படும் தண்ணீர் இவற்றைப் பாதிக்காது. இவற்றைப் பயன்படுத்தித் துாக்கி எறியும்போது லேசாகக் கீறிவிட்டால் போதும். இந்தக் கீறல் வழியாகக் கடலின் உப்பு நீர் உள்ளே சென்று குவளையைக் கரைத்து விடும். அதேபோல இவற்றை நிலத்தில் போட்டாலும் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது. உப்புத் தண்ணீர் பட்டுக் கரைந்து நைட்ரஜன், பாஸ்பரஸ் ஆகியவற்றை வெளிப்படுத்தும். இவை இரண்டும் தாவரங்களுக்குத் தேவையான சத்துக்கள் என்பதால் சுற்றுச் சூழலுக்கு நன்மையே. விரைவில் இவற்றாலான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கலாம்.