01. ஸ்வீடன் நாட்டில் 45 - 83 வயதுக்கு உட்பட்ட 69,750 பேரை வைத்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், யாரெல்லாம் அடிக்கடி அதிகமான சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்களைப் பருகுகின்றனரோ அவர்களுக்கெல்லாம் ஏழு விதமான இதய நோய்கள் வருவதற்கான சாத்தியங்கள் அதிகரிப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
02. நம் சூரிய மண்டலத்தில் செவ்வாய்க்கும், வியாழனுக்கும் நடுவே உள்ள விண்கல் மண்டலத்தில் ஏராளமான விண்கற்கள் இருப்பதை நாம் அறிவோம். தற்போது விஞ்ஞானிகள் அதே மண்டலத்தில் 10 சென்டிமீட்டருக்கும் குறைவான அளவுடைய 138 புதிய விண்கற்களைக் கண்டறிந்துள்ளனர்.
03. கொசுக்கள் வாயிலாகப் பரவும் நோய் மலேரியா. இதை ஒழிப்பதற்கு உலக நாடுகள் போராடி வருகின்றன. இந்த ஆண்டு அக்டோபர் மாதம் மலேரியா நோயை முழுவதுமாக ஒழித்த நாடாக எகிப்து மாறியிருக்கிறது. ஆனால், அதே நேரம் மற்ற ஆப்ரிக்க நாடுகளில் இந்த நோயின் பாதிப்புகள் அதிகரித்த வண்ணம் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
04. பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட ஐந்து நாடுகளின் உதவியோடு வடிவமைக்கப்பட்டது டார்க் எனர்ஜி கேமரா. இது நம் பூமியில் இருந்து 1.5 கோடி ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கும் மெஸ்ஸியர் எனும் கேலக்ஸியை மிக அழகாக படம் எடுத்துள்ளது.
05. அமெரிக்காவைச் சேர்ந்த மேரிலாந்து பல்கலை மேற்கொண்ட ஆய்வில், காட்டுத் தீயால் ஏற்படும் புகை பல ஆயிரம் கிலோமீட்டர் தள்ளி வாழ்பவர்களிடையே கூட சுவாசக் கோளாறுகளை உருவாக்கும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.