அறிவியல் துளிகள்
01. கடந்த 5,000 ஆண்டுகளாக இல்லாதபடி, முதன்முறையாக எகிப்து நாட்டில் புள்ளி கழுதைப் புலியை (Spotted hyena) மக்கள் கண்டுள்ளனர். மாறி வரும் பருவகால மாற்றமே இதற்கு காரணம் என்கின்றனர் உயிரியலாளர்கள்.02. ஆடு, பன்றி முதலிய விலங்குகளின் மாமிசம் சிவப்பு இறைச்சி என்றழைக்கப்படுகிறது. இதில் புரதச்சத்து இருந்தாலும், கூடவே கெட்ட கொழுப்புகளும் உள்ளன. எனவே, இவற்றுக்குப் பதிலாக பூஞ்சையிலிருந்து எடுக்கப்படும் மைக்கோ புரதத்தை உட்கொள்வது நல்லது என்று, இங்கிலாந்தில் உள்ள நார்த்தம்ப்ரியா பல்கலை மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.03. கரியமில வாயு கலந்த தண்ணீரை சோடா என்கிறோம். பெரிய அளவில் இல்லாவிட்டாலும் குறைந்த அளவேனும் இது ரத்த சர்க்கரையையும், உடல் எடையையும் குறைக்க உதவும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.04. கடந்தாண்டு இறுதியில் பூமியை நெருங்கி வந்த விண்கல் '2024 பிடி5' நிலவில் இருந்து உடைந்துபோன பகுதியாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.05. தற்போது வரை கிடைத்துள்ள தொல்லெச்சங்களை வைத்து, டைனோசர் இனமே பூமத்திய ரேகையை ஒட்டிய பகுதிகளில் தோன்றி, பிற பகுதிகளுக்கு பரவியிருக்கக் கூடும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.