அறிவியல் துளிகள்
01. அமெரிக்காவின் 'நாசா' அனுப்பிய 'வாயேஜர் - 2' தான் யுரேனஸ், நெப்டியூன் ஆகிய இரு கோள்களுக்கு அருகிலும் சென்று படம் எடுத்த முதல் விண்கலம். இது அனுப்பிய படங்களில் இரு கோள்களும் பளிச்சென்ற அடர் நீல நிறத்தில் இருந்தன. ஆனால், தற்போது, இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலை ஆய்வாளர்கள், ஹப்பிள் தொலைநோக்கி அனுப்பிய படங்களோடு, ஐரோப்பாவின் ஆய்வு மையத்தில் உள்ள மிகப் பெரிய தொலைநோக்கியில் தெரிந்த நிறங்களையும் வைத்து இரு கோள்களும் ஒன்று போலவே வெளிர் நீல நிறத்தில் இருப்பதாக அறிவித்துள்ளனர்.02. இங்கிலாந்தில் உள்ள பிரிஸ்டல் பல்கலையின் புவியியல் மற்றும் உயிரியியல் மையத்தின் ஆய்வாளர்கள் 51.8 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் வாழ்ந்த ஒரு பெரிய வேட்டையாடும் புழுவை கண்டறிந்துள்ளனர். இது கிரீன்லாந்தில் புதைபடிவமாகக் கிடைத்துள்ளது. இதற்கு 'திமோர்பெஸ்டியா' என்று பெயரிட்டுள்ளனர். லத்தீன் மொழியில் இதற்கு, 'பயங்கரமான மிருகம்' என்று பொருள்.03. விண்வெளி பயணம் செல்லும் விஞ்ஞானிகளுக்குத் தேவையான அனைத்து சத்துகளும் கிடைக்கும் வகையில் ஒரு சரிவிகித உணவைக் கண்டறிய ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் பல்கலை ஆய்வு மேற்கொண்டது. இறுதியில் சோயாபீன்ஸ், கசகசா விதைகள், பார்லி, வேர்க்கடலை, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, சூரியகாந்தி விதைகளைக் கொண்ட சைவ சாலட் தான் அவர்களுக்கான சிறந்த உணவு என்று கண்டறியப்பட்டது.