அறிவியல் துளிகள்
01. பாதாள எரிவாயு குழாய்களில் பிரச்னை ஏற்படும் போது குறிப்பிட்ட அந்தப் பகுதியில் குழாய் அகழ்ந்து எடுக்கப்பட்டு சரிசெய்து பொருத்துவர். இதற்கு அதிக நேரமும் செலவும் ஆகிறது. இதற்கு மாற்றாக குழாய்களுக்கு உள்ளேயே சென்று சரி செய்யும் ரோபோ ஒன்றை அமெரிக்காவைச் சேர்ந்த கார்னகி மெல்லன் பல்கலை ஆய்வாளர்கள் உருவாக்கி உள்ளனர். 27 கிலோ எடை கொண்ட இந்த ரோபோ, 14.5 நீள குழாய்களைக் கண்காணிக்க 8 மணி நேரம் மட்டுமே எடுத்துக் கொள்ளும். 02. கடலிலே கச்சா எண்ணெய் கொட்டிவிட்டால் அதை அகற்ற தற்போது 'ஜேனஸ் மெம்பரைன்கள்' எனப்படும் ஒருவகைப் படலங்கள் பயன்படுகின்றன. இவை சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிப்பவை. அதனால் இவற்றுக்குப் பதிலாக சிப்பிக் காளான்களைப் பயன்படுத்தலாம் என்று அரேபியாவில் உள்ள அப்துல்லா பல்கலை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். சிப்பிக் காளான்களில் இருந்து உருவாக்கப்படும் இந்தப் படலங்கள் வழக்கமான படலங்களை விட, 445 சதவீதம் அதிகமான எண்ணெயை உறிஞ்சி எடுப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இவை, இயற்கையிலேயே மக்கிவிடும் என்பதால் சுற்றுச்சூழலுக்கு ஆபத்தில்லை.