அறிவியல் துளிகள்
1. கரப்பான் பூச்சிகள், பாக்டீரியாக்களை, வீட்டுக் குப்பையிலும், உட்புறக் காற்றிலும் பரப்புகின்றன என்கிறது ஒரு புதிய ஆய்வு. இதனால், வீட்டில் உள்ளோருக்கு ஆஸ்துமா, சில ஒவ்வாமைகள் ஏற்படலாம். 2. சில பால் புரதங்களைப் பயன்படுத்தி, செயற்கை நாக்கு ஒன்றை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இந்த செயற்கை நாக்கு, உணவின் காரத்தன்மையை கண்டறியும் திறன் கொண்டது. இது சொல்லும் கார அளவும், மனிதச் சுவைஞர்கள் சாப்பிட்டுச் சொல்லும் கார அளவும் பொருந்திப் போகிறது. 3. பக்கவாதத்தால் பேச்சை இழந்தோருக்கும், கைகளை பயன்படுத்த முடியா தோருக்கும், மூளை--கணினி இடைமுகமாகச் செயல்படும், 'பாரட்ரோமிக்ஸ் கனெக்ஸஸ்' சில்லு வந்துள்ளது. இதை மூளையில் பதித்தால், நோயாளி பேச நினைப்பது கணினித் திரையில் தெரியும். கணினியையும் சிந்தனையாலேயே இயக்கலாம். 4. நாசாவின் மையத்தில் இருந்து ஒரு கி.மீ., தொலைவி லுள்ள சூரிய மின்தகடுகளுக்கு லேசர் கதிரை பாய்ச்சினர். இதன் வாயிலாக 1.1 கி.வா. மின் ஆற்றல் உற்பத்தியானது. அடுத்து விண்வெளியில் சூரிய ஒளியை மின்சாரமாக்கி, அதில் லேசர் கதிர்களை உற்பத்தி செய்து, பூமியிலுள்ள சூரிய ஒளிப் பலகை மீது செலுத்துவர். லேசர் மீண்டும் மின்சாரமாக மாறும். 5. ஒரு பிளாஸ்திரி போல விரலில் அணியும் கருவியை ஆய்வாளர்கள் தயாரித்துள்ளனர். இதை விரலில் அணிந்துகொண்டு, மொபைல் திரையைத் தொட்டால், திரையில் காட்டப்படும் பொருளைத் தொடக்கூடிய உணர்வு ஏற்படும்.