1. காபி போட்டதும் மீதமாகும் ஈரத் துாளை உலர்த்தாமல், வெறும் 90 நொடிகளில் உயர்தர 'உயிரிக் கரி'யாக மாற்றும் புதிய பிளாஸ்மா தொழில் நுட்பத்தை கொரியாவின் புவி அறிவியல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இது மிகக் குறைவாகவே மாசுக்களை உமிழ்கிறது. இதன் வாயிலாக, உணவுக்கழிவுகள் மதிப்புமிக்க திட எரிபொருளாக மாறுகின்றன.
2. 'ஏரோனாக்ஸ் கோ'வின் ஆய்வாளர்கள், சுற்றுலா செல்வோருக்கான சிறிய, உடை இஸ்திரி கருவியை உரு வாக்கியுள்ளனர். இது, உலர்ந்த ஆடைக்குள் சூடான காற்றைச் செலுத்தி, 8 முதல் 12 நிமிடங்களில் சுருக்கங்களை நீக்கிவிடுகிறது. ஈரத் துணிகளை உலர்த்தவும், அவற்றின் மீது வாசனைத் திரவியத்தை பீய்ச்சி நறுமணமாக்கவும் உதவுகிறது இந்த கருவி.
3. அமெரிக்க விமானப்படை, தானோட்டி போர் ட்ரோன்களை தயாரிப் பதற்கான டெண்டரை இரு தனியார் நிறுவனங்களுக்கு கொடுத்திருக்கிறது. 'லாயல் விங்மென்' எனப்படும் இந்த ட்ரோன்கள், ஏ.ஐ., தொழில்நுட்பத்தில் இயங்குபவை. வரும் 2030-க்குள் 150-க்கும் மேற்பட்ட தானோட்டி ட்ரோன்களையும், எதிர்காலத்தில் சுமார் 1,000 ட்ரோன்களையும் வான்வழிப் போர்களில் இணைக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
4. டெஸ்லா நிறுவனத்தின் ரோபோடாக்ஸியான 'சைபர்கேப்' (Cybercab) குறித்த அதிகாரப்பூர்வ விபரங்கள் கசிந்துள்ளன. 'ஸ்டீயரிங் வீல்' இல்லாத இந்த மின் வாகனம், ஒருமுறை சார்ஜ் செய்தால், 670 கி.மீ., செல்லும். இந்த ரோபோடாக்சி நடைமுறைக்கு வந்தால், யாரும் சொந்தமாக கார் வாங்கவேண்டிய திருக்காது என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
5. சீனா தனது மிகப்பெரிய அரை--மூழ்கி மிதக்கும் மீன் பண்ணையான 'சின்ஹுவான் எண் -1' என்ற தளத்தை ஹாய்னான் தீவுக்கு அப்பால் கடலில் நிறுவியுள்ளது. ஆழ்கடல் மீன்வளர்ப்புக்காக அதிநவீன தொழில்நுட்பத்துடன் கட்டப்பட்டுள்ள இந்த பிரமாண்டமான தளம், கடுமையான கடல் அலைகளையும் தாங்கி நிற்கும் திறன் கொண்டது. இதன் வாயிலாக ஆண்டுக்கு 4,000 டன்னுக்கும் அதிகமான மீன்களை உற்பத்தி செய்ய சீனா திட்டமிட்டுள்ளது.