உள்ளூர் செய்திகள்

தோல் காக்கும் தோல்

சூரியனிலிருந்து வரும் ஆபத்தான புற ஊதாக் கதிர்கள் மனிதர்களுக்கு தீங்கு செய்பவை. இவற்றிலிருந்து காத்துக்கொள்ள தோல் மீது 'சன் ஸ்க்ரீன்' பயன்படுத்துகிறோம். இவற்றில் சேர்க்கப்படும் டைட்டானியம் டை ஆக்சைட், ஜின்க் ஆக்சைட் ஆகியவை சுற்றுச் சூழலுக்குக் கேடானவை. அதாவது மனிதர்கள் குளிக்கும்போது கழுவப்படும் சன்ஸ்க்ரீனில் உள்ள சில ஆபத்தான வேதிப் பொருட்கள் கழிவுநீரில் கலந்து கடலை அடைகின்றன. கடல் வாழ் உயிரினங்களுக்கு இவை கேடு விளைவிக்கின்றன. எனவே சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்காத சன்ஸ்க்ரீனை உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வந்தனர். சிங்கப்பூரில் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலை ஆய்வாளர்கள் பூக்களில் உள்ள மகரந்தங்களைப் பயன்படுத்தி சன்ஸ்க்ரீன் தயாரித்துள்ளனர். ஒரு சிலருக்கு மகரந்தங்களைச் சுவாசித்தால் ஒவ்வாமை ஏற்படும். அதை மனதில் வைத்தே அவ்வளவாக ஒவ்வாமை ஏற்படுத்தாத சூரியகாந்தி, கேமல்லியா பூக்களின் மகரந்தங்களை இதற்கு உபயோகித்தனர். அதிலும் கேமல்லியா மகரந்தங்கள் ஏற்கனவே சத்துணவாகப் பரிந்துரைக்கப்படுகின்றன என்பது கூடுதல் சிறப்பு. எனவே மகரந்தங்களில் உள்ள நுண் பொருட்களை நீக்கி, மேற்தோலை மட்டும் பிரித்து 'ஜெல்' தயாரித்தனர். விலங்குகள் மீது இவற்றைப் பரிசோதித்தனர். இந்த ஜெல் 97 சதவீத புற ஊதாக் கதிர்களைத் தடுத்து நிறுத்தியது. அதுமட்டுமில்லாமல் தோலின் வெப்பநிலையை 5 டிகிரி வரை குறைத்தது. இதனால் கடல் வாழ் உயிரினங்களுக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !