ஒளி வேகத்தில் செயற்கை அறிவை இயக்கும் நுட்பம்
எலக்ட்ரான்களை பயன்படுத்தும் மின்னணு சில்லுகளின் வேகம், இனி வரும் கணினிகளுக்கு போதாது. எனவே, ஏறத்தாழ, ஒளியின் வேகத்தில் தகவல்களை அலசி, கணக்கீடுகளைச் செய்யும் முறைகளை விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.அண்மையில், ஒளியைப் பயன்படுத்தி கணக்கிடும் புரட்சிகரமான முறையை பின்லாந்தின் ஆல்டோ பல்கலை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். 'சிங்கிள்-ஷாட் டென்சர் ஆப்டிகல் கம்ப்யூட்டிங்' என அழைக்கப்படும் இம்முறையில், தரவுகள் எலக்ட்ரான்களுக்குப் பதில் ஒளி அலைகளின் வீச்சிலும் நிலைகளிலும் (Amplitude and Phase) ஏற்றப்படுகின்றன.தற்போதைய அதிவேக ஜி.பி.யு., சில்லுகளுடன் ஒப்பிடுகையில் இந்த ஒளிச் சில்லு, மிகக் குறைந்த மின் ஆற்றலில், அதிக வேகத்தில் தரவுகளைக் கையாளும் திறன் கொண்டது. குறிப்பாக, செயற்கை நுண்ணறிவின் ஆழ் கற்றல் செயல்பாடுகளுக்குத் தேவையான சிக்கலான 'மேட்ரிக்ஸ்' மற்றும் 'டென்சார்' பெருக்கல் கணக்குகளை, இது ஒளியின் ஒரே ஒரு பயணத்தில் (Single-shot) முடித்துவிடுகிறது. படிப்படியாகக் கணக்கிடும் பழைய வன்பொருள் முறைகளை இது மாற்றியமைக்கும். இத்தொழில்நுட்பத்தை இன்னும் சில ஆண்டுகளில் சிறிய 'போட்டானிக் சில்லு'களாக (Photonic Chips) ஒருங்கிணைக்க முடியும். இது எதிர்கால சூப்பர் கம்ப்யூட்டர்கள் அதிவேகமாகவும், குறைந்த மின்சாரத்தில் இயங்கும் வகையிலும் அமையப் பெரும் பங்காற்றும்.