உள்ளூர் செய்திகள்

மாய சிறகுகளுக்கு மயங்கும் மனித மூளை

மனித உடலைப் பற்றி மூளை எப்படி புரிந்துகொள்கிறது என்பது இன்னும் ஒரு புதிரான விஷயம்தான். இது குறித்து ஆராய, விர்ச்சுவல் ரியாலிட்டி (வி.ஆர்.,) எனப்படும் மெய்நிகர் தொழில்நுட்பத்தை சீனாவின் பெய்ஜிங் பல்கலை ஆய்வாளர்கள். பயன்படுத்தினர். இந்த ஆய்வில் பங்கேற்ற தன்னார்வலர்களுக்கு, வி.ஆர்., ஹெட்செட்டை அணிவித்தனர். உள்ளே தெரியும் காட்சியில், அவர்களுக்கு கைகளுக்குப் பதிலாகப் பெரிய இறக்கைகள் இருப்பது போலக் காட்டப்பட்டது. சில பறத்தல் பயிற்சிகளுக்குப் பின், அவர்களது மூளை அந்த மெய்நிகர் சிறகுகளைத் சொந்த உடல் உறுப்பாகவே பாவிக்கத் தொடங்கியது. ஆய்வாளர்கள் மனித உடலின் கைகள், கால்கள் போன்ற அமைப்புகளை அடையாளம் காணும் மூளையின் பகுதியான 'ஆக்ஸிபிட்டோ டெம்போரல் கார்டெக்ஸ்' மீது தங்கள் கவனத்தைச் செலுத்தினர். மெய்நிகர் பயிற்சிக்கு பிறகு எடுக்கப்பட்ட மூளை ஸ்கேன்களில், அந்த மாயச் சிறகுகளை, மனிதக் கைகளைப் போல மூளை கையாளத் தொடங்கியது தெரியவந்தது. பயிற்சியின் போது, பங்கேற்பாளர்களின் வி.ஆர்., திரையில் வானத்தையும், அதில் பல வளையங்களையும் காட்டினர். அந்த வளையத்திற்குள், அவர்கள் 'பறந்தபடியே நுழைந்து' வெளியே வருமாறு கேட்டுக்கொண்டனர். எதிர்க் காற்றில் சிறகுகள் படபடப்பது போல பங்கேற்பாளர்கள் உணர்ந்தனர். எனவே, தாங்கள் நிஜமாகவே பறப்பது போன்ற மாயை அவர்களுக்குள் வலுவாக உருவானது. இதன் விளைவாக, மூளையின் காட்சிப் பகுதியும், இயக்கத் திட்டமிடல் பகுதியும் வழக்கத்தை விட மிக நெருக்கமாகத் தொடர்புகொண்டு செயல்பட்டதை ஸ்கேன் முடிவுகள் காட்டின. இந்தக் கண்டுபிடிப்புகள் வி.ஆர்., தொழில்நுட்பம் என்பது வெறும் பொழுதுபோக்குக் கருவி மட்டுமல்ல என்பதை உணர்த்துகின்றன. விபத்துகளில் உடல் உறுப்புகளை இழந்தவர்களுக்கான எதிர்கால மருத்துவச் சிகிச்சைகளுக்கும், செயற்கை உறுப்புகளைப் பயன்படுத்தப் பழகும் நவீனப் பயிற்சிகளுக்கும் இது பெரிதும் உதவும். அசாத்தியமான இயக்கங்களை எதிர்கொள்ளும்போது கூட, மனித மூளை எவ்வளவு நெகிழ்வுத்தன்மையுடனும், தகவமைப்புத் திறனுடனும் செயல்படுகிறது என்பதையும் இந்த ஆய்வு நிரூபித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !