உள்ளூர் செய்திகள்

இந்தியாவின் துருவ ஆய்வில் அடுத்த மைல்கல்

தேசிய துருவ மற்றும் பெருங்கடல் ஆராய்ச்சி மையத்தின் (NCPOR) கீழ், கிழக்கு அண்டார்டிகாவில் இந்தத் தளம் 2,000 கோடி ரூபாய் முதலீட்டில் கட்டப்பட உள்ளது. ஜனவரி 2029-க்குள் இதன் கட்டுமானத்தை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது. மைத்ரி 2 நிலையத்தில், 1989-ல் நிறுவப்பட்ட 'மைத்ரி 1'ஐ விட பல மேம்பட்ட அம்சங்கள் இருக்கும். இதன் பகுதிகளை உடனே மாற்றி அமைக்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கோடையில் சூரிய ஒளி வாயிலாகவும், ஆண்டு முழுதும் காற்றாலை வாயிலாகவும் மின் சாரத்தை இந்த நிலையம் பெறும். மேலும், இந்திய ஆய்வாளர்கள் இல்லாத மாதங்களில், தட்பவெப்பநிலைத் தரவுகளைத் தொடர்ந்து அனுப்பும் தானியங்கி கருவிகளும் இங்கு நிறுவப்படும். இந்த ஆய்வுத் தளத்திற்குத் தேவையான அனைத்து கட்டுமானம் மற்றும் கருவிகளும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டு, தென் ஆப்ரிக்கா வழியாகக் கப்பலில் அனுப்பப்படுகிறது. பிறகு, பனி போர்த்திய தரை முழுதும் இழுத்துச் செல்லப்படும். கட்டுமானப் பணிகள், அண்டார்டிகாவின் கோடையான அக்டோபர் - மார்ச் காலகட்டத்தில் மட்டுமே நடக்கும். இந்த பிரமாண்ட முயற்சி, உலக துருவ ஆய்வில் இந்தியாவின் பங்களிப்பை அதிகரிக்கும். அதுமட்டுமல்ல, பனிப் பாறைகளின் இயக்கத்தைக் கண்காணிப்பதன் மூலம், உலக பருவநிலை கொள்கை விவாதங்களில் இந்தியாவின் குரலை வலுப்படுத்தவும் உதவும். இந்திய விஞ்ஞானிகள் ஏற்கனவே தென்துருவமான அண்டார்டிகாவில் மூன்று ஆய்வு மையங்களை அமைத்துள்ளனர். தற்போது, துருவ ஆய்வின் அடுத்த மைல்கல்லாக, 'மைத்ரி 2' என்ற அதிநவீன ஆய்வுத் தளத்தை இந்தியா அமைக்கப்போகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !