இதயத்துக்கு எமனாகும் இரவு வெளிச்சம்
இரவுப் பணி காரணமாக, செயற்கையான மின்விளக்கு வெளிச்சத்தில் அதிக நேரம் செலவிட வேண்டி உள்ளது. இதனால், உடலில் உள்ள இயற்கைக் கடிகாரம் குழப்பமடைந்து பல வித நோய்கள் வரக் காரணமாகிறது. இது குறித்து உலகில் இதுவரை செய்யப்பட்ட ஆய்விலேயே மிகப்பெரிய ஆய்வை ஆஸ்திரேலியாவின் ப்லிண்டர்ஸ் பல்கலை செய்து, முடிவுகளை வெளியிட்டுள்ளது. இது 9.5 ஆண்டுகள் 40 வயதுடைய 88,905 மக்களைக் கொண்டு மேற்கொள்ளப்பட்டது. இவர்களில் இரவு நேரம் விழித்திருந்து மின் விளக்கு வெளிச்சங்களில் வேலை செய்பவர்கள், பகலில் வேலை செய்பவர்கள் என்று இரு தரப்பினரும் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்களின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது. ஆய்வு முடிவில் இரவு 12.30 முதல் காலை 6 மணி வரை செயற்கை வெளிச்சத்தில் இருப்பவர் களுக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு பிறரை விட 56 சதவீதம் அதிகம் இருப்பது தெரியவந்தது. வெளிச்சத்தின் அளவு 'லக்ஸ்' எனும் அலகில் அளக்கப்படுகிறது. இரவு வானத்தின் வெளிச்ச அளவு 0.01 லக்ஸ், இதுவே சிறிய இரவு விளக்கு பொருத்தப்பட்ட அறை என்றால் அதன் வெளிச்ச அளவு 5 லக்ஸ். 105.3 லக்ஸ் வெளிச்ச அளவில் வேலை செய்பவர்களுக்கு மோசமான இதய பாதிப்பு ஏற்படும் என்கின்றனர் விஞ்ஞானிகள். எனவே இரவில் துாங்கி, பகலில் சூரிய வெளிச் சத்தில் அல்லது மின்விளக்கு வெளிச்சத்தில் வேலை செய்வதே சிறந்தது என்பது அறிவியலாளர்கள் கருத்து.