காலத்தை வளைக்கும் நேர படிகங்கள்
கோட்பாட்டு இயற்பியலில் மட்டுமே சாத்தியம் என்று கருதப்பட்ட ஒன்றை, கொலராடோ பல்கலை இயற்பியலாளர்கள் நிஜமாக்கியுள்ளனர். அதுதான் 'கண்ணுக்குத் தெரியும் நேரப் படிகம்'. வைரம், உப்பு போன்ற வழக்கமான படிகங்கள், இடைவெளியில் (Space) அணுக்களின் சீரான கட்டமைப்பை கொண்டிருக்கும். ஆனால், இந்த 'நேரப் படிகங்கள்' தங்கள் கட்டமைப்பை 'காலத்தில்' (Time) திரும்பத் திரும்ப வெளிப்படுத்துகின்றன. 'லிக்விட் கிரிஸ்டல்' எனப்படும் திரவப் படிகப் பொருளால் ஆன இதன் மீது ஒளி படும்போது, அது தனக்கான ஒரு தாளகதியை உருவாக்கிக் கொண்டு, சோர்வடையாத ஒரு இதயத்துடிப்பை போல தொடர்ந்து துடிக்கிறது. இதற்கு முன்பே நேரப் படிகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால், அவை மிகவும் குளிரூட்டப்பட்ட சூழலில், குவான்டம் கருவிகளைக் கொண்டு மட்டுமே சாத்தியமாகின. அவை கண்ணுக்குத் தெரியாது. இந்தப் படிகம் சாதாரண ஒளியின் துாண்டலில் செயல்படுவதோடு, மனித கண்களுக்குத் தெரியும் வகையில் அமைந்துள்ளது. இதன் உடனடிப் பயன் வியக்கத்தக்கது. ரூபாய் நோட்டுகள் மற்றும் பாஸ்போர்ட்டுகளில் போலிகளைத் தவிர்க்க உதவும் 'கால நீர்முத்திரையாக' (Time watermark) இது பயன்படலாம். தகவல்களை அணுக்களிலோ காந்தங்களிலோ சேமிப்பதற்குப் பதிலாக, இந்தப் படிகங்களின் தாள லயத்தில் (Rhythmic patterns) சேமிக்க முடியும். இது மிகக் குறைந்த ஆற்றலில் இயங்கும் உணரிகள் மற்றும் பாதுகாப்பான தகவல் தொடர்புக்கு வழிவகுக்கும்.