செங்கோளில் தண்ணீர்!
செவ்வாய் கோளில் தண்ணீர் உள்ளதா, இல்லையா என்பது குறித்த ஆய்வுகள் நீண்ட காலமாக நடந்து வருகின்றன. நீர் இருந்தால் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகளும் அதிகம். தற்போது அமெரிக்காவைச் சேர்ந்த கலிபோர்னியா பல்கலை செவ்வாயின் நிலப்பரப்பிற்கு அடியில் நீர் இருப்பதை உறுதி செய்துள்ளது. செவ்வாயின் நிலப்பரப்பு முழுதையும் 1.6 கி.மீ., உயரத்திற்கு மூழ்க வைக்கும் அளவிற்கு நீர் உள்ளது தெரியவந்துள்ளது. ஆனால், இந்த நீர் மிக ஆழமாக இருப்பதால் அதைச் சுலபத்தில் வெளியே எடுத்துப் பயன்படுத்த முடியாது.அமெரிக்காவின் 'நாசா' அனுப்பிய இன்சைட் லாண்டர் (Insight lander) விண்கலம் செவ்வாயின் நிலப்பரப்பு, பாறைகள் பற்றிய தகவல்களைச் சேகரித்து, அவை ஆராயப்பட்டன. அப்போது செவ்வாயின் அனற்பாறைகள் தண்ணீரால் ஈரமாகி இருப்பது தெரியவந்தது. இந்தத் தண்ணீர் செவ்வாயின் மேற்பரப்பிலிருந்து 11.5 முதல் 20 கி.மீ. ஆழத்தில் உள்ளது. இவ்வளவு ஆழம் வரை தோண்டி, நீரை எடுப்பது கடினமானது. 300 கோடி ஆண்டுகளுக்கு முன்பு செவ்வாயின் ஒரு பகுதி முழுக்க நீரால் சூழப்பட்டு இருந்திருக்க வேண்டும். செவ்வாய் கோளுக்கு காந்தப் புலம் இல்லாததால், வளிமண்டலத்துடன் மேற்பரப்பு நீரும் சூரியப் புயல்கள் பட்டு ஆவியாகி இருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். மேற்கொண்டு ஆய்வு செய்யும்போது செவ்வாயின் அறியப்படாத ரகசியங்கள் வெளிவரலாம்.