உள்ளூர் செய்திகள்

உயரம் என்றால் பாதம் குறுகுறுப்பது ஏன்?

மலை உச்சி முகட்டிலோ, மாடி கட்டட விளிம்பிலோ நிற்கும்போது, பலருக்குப் பாதங்களில் ஒருவித மெல்லிய குறுகுறுப்பு அல்லது மின்சாரம் பாய்வது போன்ற உணர்வு ஏற்படுவதுண்டு. இது, பயம் என்று நாம் நினைத்திருப்போம். ஆனால், இது குறித்து ஆராய்ந்த பிரிஸ்டல் பல்கலை பேராசிரியர் மிஷெல் ஸ்பியர், 'இந்த உணர்வு, நமது உடல் தற்காப்புக்காகவும், சமநிலை பேணுவதற்காகவும் வெளிப்படுத்தும் ஒரு முன்னெச்சரிக்கை' என்கிறார். உயரமான இடங்களுக்குச் செல்லும்போது, நமது நரம்பு மண்டலம் அதீத எச்சரிக்கை அடைகிறது. இத்தகைய சூழலில் நம் மூளை, கண்களைவிட, பாதங்களிலிருந்து வரும் தகவல்களை அதிகம் நம்பத் தொடங்கும். பாதங்களின் தோல்பகுதியில் அழுத்தம் மற்றும் அதிர்வுகளைக் கண்டறியும் ஏராளமான நுண் உணரிகள் உள்ளன. அவை அனுப்பும் ஏராளமான சமிக்ஞைகளை மூளை பரிசீலிக்கிறது. இது உயரம் என்றாலே பயப்படும் 'வெர்டிகோ'விலிருந்து வேறுபட்டது என்கிறார் பேராசிரியர் ஸ்பியர். சாதாரணமாக, நாம் தரையில் நடக்கும்போதும் இதுபோன்ற சமிக்ஞைகள் மூளைக்குச் செல்லும். ஆனால், மூளை அவற்றைக் கண்டுகொள்ளாது. அதிக உயரம், ஆபத்தான சூழல் போன்றவற்றின்போது மூளை இந்த சமிக்ஞைகளை மிகையாகக் கவனிக்கிறது. ஒரு சிறிய சறுக்கலும் பெரிய விபத்தை ஏற்படுத்தலாம் என்பதால், மூளை உடலை நிலைநிறுத்த இந்தப் பாத உணர்வுகளைத் தீவிரப்படுத்துகிறது. இது, மனித மூளை உயிர்வாழ்தலுக்காகச் சமநிலையை எவ்வளவு வியக்கத்தக்க வகையில் கையாள்கிறது என்பதைக் காட்டுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !