உள்ளூர் செய்திகள்

இரை தேடினாலும் இணை பிரியாத வனதேவதைகள்

மேற்கு தொடர்ச்சிமலையில் அமைந்துள்ள வால்பாறை, ஆனைமலை புலிகள் காப்பகத்தின் முக்கிய அங்கம். வால்பாறையில் ஹார்ன்பில் என்றழைக்கப்படும் இருவாச்சிப்பறவைகள் அதிக அளவில் உள்ளன. குறிப்பாக பழைய வால்பாறை, புதுத்தோட்டம், அக்காமலை கிராஸ்ஹில்ஸ், வில்லோனி, அட்டகட்டி உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் வாழ்கின்றன.'ஹார்ன்பில்' பறவைகள் மரத்தில் கூடுகட்டி, குடும்பமாக வாழ்பவை. இந்த பறவையின் இனப்பெருக்க காலம் பிப்ரவரி முதல் மே வரை. 40 ஆண்டுகள் வரை வாழக்கூடிய இந்தப்பறவை எப்போதும் இணையுடன் தான் வெளியில் செல்லும். இணையுடன் சேர்ந்து இரைகளை தேடும் இருவாச்சிப்பறவைகளை சுற்றுலா பயணியர் கண்டு ரசிக்கின்றனர். இருவாச்சிப் பறவை கேரளா, அருணாச்சலப் பிரதேசத்தின் மாநில பறவை.பறவை ஆராய்ச்சியாளர்கள் கூறியதாவது: தென் இந்தியாவில் மேற்கு தொடர்ச்சிமலையில் நான்கு வகை இருவாச்சிப் பறவைகள் உள்ளன. உலக அளவில் பெரும்பாத இருவாச்சி, மலபார் இருவாச்சி, சாம்பல்நிற இருவாச்சி உள்ளிட்ட 54 வகையான பறவைகள் உள்ளன. பூச்சி, பழங்கள் இவற்றின் உணவு. மிகவும் சுறுசுறுப்பாக காணப்படும் இந்த பறவை, தன் இணையை விட்டு ஒரு போதும் பிரியாது. இரை தேட சென்றாலும் கூண்டில் இருந்தாலும் இணையுடனேயே இருக்கும். ஆண்டு தோறும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் மட்டுமே இணை சேரும்.இனப்பெருக்க காலத்தில் இணையுடன் சேர்ந்து உயரமான மரப் பொந்துகளில் கூடு கட்டி வாழும். பெண் பறவை பொந்துக்குள் அமர்ந்தவுடன், ஆண் பறவை தனது எச்சில், ஆற்று படுகையில் உள்ள ஈர மண்ணை அலகால் எடுத்து வந்து கூட்டை மூடிவிடும். பெண் பறவைக்கு உணவு கொடுக்க சிறிய துவாரத்தை மட்டும் விட்டிருக்கும்.பெண் பறவை தனது இறக்கை முழுவதையும் உதிர்த்து, மெத்தை போன்று படுக்கை அமைத்து, 3 முட்டைகள் வரை இடும். ஏழு வாரங்கள் கழித்து முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் வரும். அப்போது இறகு வளர்ந்த பெண் பறவை கூட்டை உடைத்துக் கொண்டு வெளியேறும். அது வரை இணைக்கு, ஆண் பறவையே உணவு ஊட்டும்.காடுகள் வாழ இந்த பறவைகள் முக்கியம். அதனால் வனத்தின் தேவதை பறவை என்றும் அழைக்கப்படுகின்றன. இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்