உள்ளூர் செய்திகள்

பைக்கில் போறவரே... சைக்கிளை தெரியுமா!

இத்தாலி மொழியில் 1948ல் வெளியான 'பைசைக்கிள் தீவ்ஸ்'. கதாநாயகன் அந்தோணியாவுக்கு போஸ்டர் ஒட்டும் வேலை. கம்பெனி சட்டப்படி ஊழியருக்கு சைக்கிள் கட்டாயம். திருடு போன சைக்கிளை கண்டுபிடிக்க முடியாமல் வேறு சைக்கிளை திருடுகிறார். இந்த படத்தை பார்த்த இந்திய இயக்குனர் சத்யஜித்ரே தானும் இப்படி ஒரு படம் எடுக்க வேண்டும் என்ற ஆசையில் இயக்குனர் ஆனார். எனவே அந்த மகா கலைஞனை உருவாக்கியது ஒரு சைக்கிள் தானே!1961ல் பாவ மன்னிப்பு படத்தில் 'வந்த நாள் முதல் இந்த நாள் வரை வானம் மாறவில்லை... மனிதன் மாறிவிட்டான்...' என கண்ணதாசன் வரிகளுக்கு சைக்கிளில் பயணித்தபடி உயிர் கொடுத்தார் சிவாஜி.1979ல் 'பொண்ணு ஊருக்குப் புதுசு' படத்தில் சிறுவர் புடைசூழ சைக்கிள் ஓட்டிப் பழகும் சுதாகர் நடிப்பில் 'ஓரம்போ... ஓரம்போ... ருக்குமணி வண்டி வருது...' என இளையராஜா இசைக்க சைக்கிளோடு நம் மனதும் உருண்டது. ஏன் இந்த பீடிகை? சைக்கிள்கள் நம்மூரில் மட்டுமின்றி உலக சினிமாக்களிலும் உருண்டு வந்திருக்கிறது. முன்னோக்கி சுழலும் சைக்கிள் சக்கரங்கள், காலச்சக்கரத்தில் அதன் பின்னோக்கி பயணித்த அனுபவம் இதோ...முன்பு கிராமங்களில் நான்கு சைக்கிள்கள் தவறாமல் வரும். பள்ளி ஆசிரியர் மூவர், தபால்காரர் ஒருவர். என்றாவது நர்சுகள் சிலர். ஜாமின் இருந்தால் மட்டுமே அறிமுகம் இல்லாதவருக்கு வாடகை சைக்கிள். இவை 1990க்கு முந்தையவை. அது பஸ் வசதி இல்லாத காலகட்டம். சொந்த சைக்கிள் வைத்திருப்பவருக்கு 'அவருக்கென்னப்பா... வசதி வாய்ப்பு இருக்கு...,' என்ற பெருமித பேச்சு வந்து சேரும்.அப்பாக்கள் பிடியில் வளைந்து, விழுந்து சைக்கிள் பழகுவது சிறுவர்களுக்கு கட்டாய பாடம். 1980ல் சைக்கிளின் விலை ரூ.800. அதற்கு ஊராட்சியில் வட்ட தகடு வடிவில் உரிமம் பெற வேண்டும். ஆண்டுக்கு ஒருமுறை உரிமம் புதுப்பிக்க ரூ.1.25 வரி.ரேஷன் கடைக்கு இணையாக பஞ்சர் கடைகளில் கூட்டம் அலைமோதும். அவசர பயணங்களுக்கு தோள் கொடுத்ததும் சைக்கிள். இன்று கால் டாக்சிகள் போல அன்று வாடகை சைக்கிள்கள் வலம் வந்தன. 50 காசில் தொடங்கி ரூ.2 வரை மணிக்கு ஏற்ப கட்டணம். நாள் வாடகை என்றால் ரூ.5 பஞ்சருக்கு ரூ.1. தேடிப்பிடித்து யாரையாவது அழைத்து வந்து கடைக்காரரிடம் நிறுத்தினால், 'ம்... அந்த அஞ்சாம் நம்பர் வண்டியை எடுத்துக்கோங்க...' என காரை ஒப்படைப்பது போல் சைக்கிளை வாடகைக்கு தருவார்கள். அதோடு போகுமா... 'தம்பி... பாத்து போங்க... இப்ப தான் ஓவர் ஆயில் பார்த்துருக்கு... புது டயரு... கொஞ்சமா பிரேக் போடுங்க...' என குறைந்தது முப்பது கட்டளைகளை விதிப்பார் கடைக்காரர்.சீனா, ஜெர்மனி, நெதர்லாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில் இன்றும் சைக்கிளுக்கு தனி வழித்தடம் உள்ளது. உடலுக்கு ஆரோக்கியம் தரும் சைக்கிள் பயணத்தை வெளிநாட்டு அரசுகள் ஆதரிக்கின்றன. நாம் சைக்கிளையே புறக்கணித்துவிட்டோம். இந்தியாவில் சுற்றுச்சூழலை பாதுகாக்க சைக்கிள் பயணத்தை ஊக்குவித்து தனி வழித்தடம் அமைக்குமாறு பச்சேரி கமிட்டி மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது உண்மை தான்... ஆனால் நடப்பதற்கே வழி இல்லாமல் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நம்மூர் ரோடுகளில் சைக்கிளுக்கு எங்கே இடம் விடுவது?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்