உள்ளூர் செய்திகள்

ஆச்சர்யத்தில் ஆழ்த்த அழைக்கும் அரிட்டாபட்டி!

இயற்கை எழில் கொஞ்சும் வயல்வெளிகள், வானுயர்ந்து நிற்கும் மலை கூட்டங்கள், மீன்கள் துள்ளி விளையாடும் கண்மாய்கள், பசுமை படர்ந்த தாமரை குளங்கள், நாடு விட்டு நாடு வந்து பறந்துபாடும் பறவைகள், காணும் இடமெங்கும் தொல்லியல் சின்னங்கள், கள்ளம் கபடமில்லாமல் பாசம் காட்டும் மக்கள் என ... நகரத்து நெரிசலில் இருந்து நகர்ந்து நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்திட அழைக்கும் மதுரை அருகேயுள்ள அரிட்டாபட்டி கிராமம் நோக்கி பயணிக்கலாம்.குடவரை சிவன் கோயில்அரிட்டாபட்டி கழிஞ்சமலையில் 7 முதல் 8ம் நுாற்றாண்டில் முற்கால பாண்டியர்களின் குடவரை சிவன் கோயில் உள்ளது. சிறிய முன் மண்டபம், வாயிலின் இருபுறம் வாயில் காவலர்கள் சிற்பங்கள் உள்ளன. கோயிலின் வலது மாடத்தில் உள்ள விநாயகர் புடைப்பு சிற்பம் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் சாயலில் உள்ளது. கருவறையில் ஒரே கல்லில் செதுக்கிய பெரிய சிவலிங்கம் இருப்பது சிறப்பு. கிராம மக்கள் கோயிலை இடைச்சி மண்டபம் என்கிறார்கள். மகாவீரர் புடைப்பு சிற்பம்குகை அருகே வலதுபுறம் மகாவீரர் புடைப்பு சிற்பம் உள்ளது. கீழேயுள்ள வட்டெழுத்து கல்வெட்டில் 'பாதிரிக்குடி, மலை திருப்பிணையன் மலை' என இவ்வூர் பெயர் பெற்ற தகவல் உள்ளது. மகாவீரர் சிற்பம் மீது நுண் சுதை பூசி, ஓவியம் தீட்டியுள்ளனர். அரிய சின்னங்களின் மூலம் இவ்வூர்வரலாறு கி.மு., 3ம் நுாற்றாண்டில் துவங்குகிறது. 13ம் நுாற்றாண்டில் வணிகம் செழிப்பாக இருந்துள்ளது என தொல்லியல் ஆய்வாளர்கள் பதிவு செய்துள்ளனர்.பிரிட்டிஷ் காலத்து தடுப்பணைஅரிட்டாபட்டி மலை மேல் பாறையில் இயற்கைநீர் ஊற்று வழிந்தோடுகிறது. நீர்வழிந்தோடும் வழித்தடத்தின் கீழே சமதள மலை பாறை மீது பிரிட்டிஷ் ஆட்சியில் கட்டிய கல் தடுப்பணை உள்ளது. பல ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி தரும் இது மேல குளம் என அழைக்கப்படுகிறது.சிவனின் உருவம் லகுலீசர்சிவன் கோயிலின் இடது மாடத்தில் லகுலீசர் புடைப்பு சிற்பம் உள்ளது. இந்த லகுலீசர் தமிழகத்தில் வேறு எங்கும் காணகிடைக்காத அற்புதம். ஒரு கையை தொடைமீது வைத்து, மற்றொரு கையில் தண்டம் தாங்கி சுகாசனத்தில் அமர்ந்திருக்கும் இவர் சிவனின் மறுஉருவமாக பார்க்கப்படுகிறார். லகுலீச பாசுபதம் என்ற சைவ சமயம் 7 முதல் 8ம் நுாற்றாண்டுகளில் பாண்டிய நாட்டில் செல்வாக்கு பெற்றிருந்ததற்கு சான்று.கிராமத்து காளி அம்மன்சிவன் கோயிலின் வலதுமலை குன்றில் உருட்டும் விழிகளுடன் அமர்ந்து அருள்புரிகிறார் கிராமத்து காளி அம்மன். சிவன் கோயில் வருவோர் அம்மனை வழிபட்டு, பூஜைசெய்து வேண்டுகிறார்கள். இக்கோயில் வலதுபுறம் கீழே பாறையில் நடுவில் குழி, சுற்றிலும் சிறு லிங்கம் போல் 8 அமைப்புகள் செதுக்கப்பட்டுள்ளது. குழி சூரியன், 8 லிங்கங்கள் 8 கோள்களை பிரதிபலிப்பதால் சூரிய குடும்பம் என்கிறார்கள் கிராமத்தினர்.பஞ்ச பாண்டவர் படுக்கைகழிஞ்சமலை மலை ஒரு பகுதியில் இயற்கைகுகை உள்ளது. குகையில் சமணர்கள் உருவாக்கிய உறைவிடநுழைவு பகுதியின் மேல் கி.மு., 3ம் நுாற்றாண்டின் 2 தமிழ் பிராமி கல்வெட்டுகள் உள்ளன. சங்ககால பாண்டியர்கள் ஆதரவில் கல் படுகைகள் கொடை வழங்கியதை கல்வெட்டு சொல்கிறது. கல்வெட்டு மழைநீரால் அழிந்திட கூடாது என நீர் வடிவதற்காக பாறையில் தடுப்பு போல் செதுக்கியுள்ளனர். மக்கள் குகையை பஞ்ச பாண்டவர் படுக்கை என்கிறார்கள்.பல்லுயிர் சூழல் மண்டலம்கழிஞ்சமலை, நாட்டார் மலை, ராமாயி மலை, ஆப்ட்டான் மலை, கழுகு மலை, தேன் கூடு மலை, கூகை கத்தி மலை தொடர்நடுவே 72 நீர் நிலைகள், சுனைகள் உள்ளன. ராஜஸ்தானின் லகுடு வல்லுாறு மற்றும் சிகப்பு வல்லுாறு, கொம்பன், மீன் தின்னி ஆந்தைகள் என 275 பறவை இனங்கள் உள்ளன.கழுகுமலையில் உள்ள பிணம் தின்னி கழுகுகள், இம்மலைவான் வழி மதுரை வரும் விமானத்தை குறுக்கிட வாய்ப்பு இருப்பதால் அது குறித்து விமான நிலையத்தில் ஒரு அறிவிப்பு உள்ளது. மலை குன்றுகள் தரும் நீராதாரத்தால் பல்லுயிர்,உணவு சங்கிலி இருப்பதால் அரிட்டாபட்டியை தமிழக அரசு பல்லுயிர் சூழல் மண்டலமாக அறிவிக்க போவதாக தகவல் கிடைத்தது மகிழ்ச்சி.- ஏ.ரவிச்சந்திரன், அரிட்டாபட்டி ஏழுமலை பாதுகாப்பு சங்க செயலாளர், பறவைகள் பல்லுயிர் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்