உள்ளூர் செய்திகள்

மோதிப்பார்.... முட்டிப்பார்....

தமிழர் கலாசாரத்தின் அடையாளம், பொங்கல் விழா. நகரங்களில் அவற்றின் முக்கியத்துவம் கேள்விக்குறியாக இருந்தாலும், கிராமங்களில் பொங்கல் பண்டிகைக்கான முக்கியத்துவம் குறைந்தபாடில்லை. காரணம், விழாவை, தங்கள் வழக்கத்துடன் ஒத்துப் போக வைத்த, அவர்களின் பழக்கவழக்கம்.'ஜல்லிக்கட்டு' நிகழ்ச்சியையும் தாண்டி, சில விளையாட்டுகள், பொங்கல் நெருங்கும் போதே, சூடுபிடித்து விடும். அதில் ஒன்று தான், 'கிடா முட்டு'. பொதுவாக, கிடாக் கறிக்கும், கிடா கஞ்சிக்கும் தான், மதுரை வட்டாரம் 'பேமஸ்' என்பார்கள்; ஆனால், அதையும் தாண்டி, 'கிடா முட்டு' விளையாட்டிற்கென, தனி ரசிகர் கூட்டமே உள்ளது. சில கட்டுப்பாடுகளும், கடுமையான விதிமுறைகளும், இது போன்ற விளையாட்டுகளை, திரைமறைவில் நடத்த காரணமாகிவிட்டதால், அதற்கான ரசிகர்களை உலகம் அறிய வாய்ப்பில்லாமல் போனது.மதுரை, உசிலம்பட்டி, கருமாத்தூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர் வீரசோழன், ராமநாதபுரம் கீழமாத்தூர் உள்ளிட்ட தென் மாவட்டங்களில், தை பிறந்தால், 'கிடா முட்டு' களைகட்டும்.'கிடா' என்றால், ஏதோ கசாப்பு கடையிலிருந்து இழுத்து வரும் ஆடுகள் அல்ல; ஒவ்வொன்றும் 'பாக்சிஸங்' வீரரைப் போல், பிறவி முழுவதும் பயிற்சி பெறுபவை. கால்களின் வலுவிற்கு, காலையில் முட்டை கலந்த பால், நடைப்பயிற்சி. களத்தில் நீண்ட நேரம் தாக்குப் பிடிக்கும் மூச்சு பயிற்சிக்கு, வாரம் ஒரு நாள், நீச்சல் பயிற்சி. தசையை மெருகேற்ற, உடை குருணையுடன், பாதாம் பருப்பு, ஊறவைத்த கொண்டை கடலை உணவு. இது தவிர, ஆக்ரோஷம், கோபத்திற்கு, 'ஸ்பெஷல்' பயிற்சிகள்.இத்தனையும் முடிந்து வந்தால், அது பார்க்க 'கிடா' போலவா இருக்கும்? 'மடா' கணக்கில் வந்து நிற்கும் அந்த கிடா, முட்டி, மோதும் போது, அதிரும் களத்தை காணமுடியும். சண்டையிடும் கிடாவிற்கு வாழ்விருக்கிறதோ, இல்லையோ, அதை வளர்ப்பவர்களுக்கு, அந்த கிடா தான், வாழ்வே. சரி வாருங்கள், 'கிடா' வளர்ப்போர் கூறும் விபரங்களை கேட்போம்... மதுரை நெல்பேட்டை முகமது யாசீர்: குட்டியிலிருந்து, ஓராண்டு கடும் பயிற்சி அளித்தால் தான், 'முட்டு கிடா' உருவாகும். 2 பல் (1.2 ஆண்டு), 4 பல்(1.4 ஆண்டு), 6 பல்(1.5 ஆண்டு) என, அதன் வயதுக்கு ஏற்ற கிடாய்களுடன் முட்டுக்கு விடப்படும். பொதுவாக, கிடாய்களுக்கு பல் வளர, 2 ஆண்டுகள் ஆகும். அந்த பருவத்தில்தான், அவற்றிக்கு ஆக்ரோஷமும், உடல் வலுவும் அதிகரிக்கும். அந்த நேரத்தில் 'களம் கட்டினால்' (போட்டி), கண்கொள்ளா காட்சியாக இருக்கும். சுத்துப்பட்டி கிராமங்களில், எப்படியும் 3 மாதத்திற்கு ஒரு 'களம்' கூடிவிடும். சிலர், அதை சூதாட்டமாக பார்க்கின்றனர். அதையும் தாண்டி, வெற்றியில் கிடைக்கும் பரிசை தான், நாங்கள் கவுரமாக பார்க்கிறோம்,'' என்றார்.'கிடா' என்பதால், ஏதோ கிராமத்தினர் விவகாரம் என நினைத்து விட வேண்டாம்; பண வசதி படைத்த பலரும், 'முட்டுக் கிடாய்' பிரியர்கள். தற்போது, போலீஸ் பாதுகாப்புடன் தான், 'கிடா முட்டு' நடத்தப்படுகிறது. அதில் வெற்றி, தோல்விக்கு நிரந்தரம் இல்லை. ஒரு முறை தோல்வி அடைந்தால், தோல்விக்கான காரணத்தை கண்டுபிடித்து, அதற்கென 'ஸ்பெஷல்' பயிற்சி கொடுக்கின்றனர். உசிலம்பட்டியைச் சேர்ந்த, மதுரை மாவட்ட பாரம்பரிய கிடாமுட்டு நடத்துவோர் சங்கத் தலைவர் 'இலைக்கடை' ரமேஷ்: என் தாத்தா காலத்திலிருந்து, இந்த விளையாட்டை நடத்துறோம். ஜல்லிக்கட்டை போல், இதற்கும் தனி ரசிகர் கூட்டம் உள்ளது. நடுவர் தீர்பே இறுதி: சண்டையில், நீண்ட நேரம் முட்டி, மோதி, தெம்பிழந்து, பின்வாங்கும் கிடாக்கள், தோல்வியடைந்ததாக அறிவிக்கப்படும். நடுவர்கள் தீர்ப்பை, மறுப்பேதுமின்றி ஏற்பது, இவ்விளையாட்டின் மற்றொரு சிறப்பு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்