தைமகளே வருக! நல்வாழ்வு தருக!
கண் கண்ட தெய்வம்விநாயகரை வழிபடுவது காணாபத்யம். முருகனை வழிபடுவது கவுமாரம். சக்தியை வழிபடுவது சாக்தம். சிவனை வழிபடுவது சைவம், திருமாலை வழிபடுவது வைணவம். அது போல சூரியனை வழிபடுவதற்கு சவுரம் என்று பெயர். சூரியனை தவிர மற்ற தெய்வங்களை காண முடியாது. சூரியன் மட்டுமே கண்ணுக்கு தெரிவதால் இவரே 'கண் கண்ட தெய்வம்'. நன்றி சொல்ல வார்த்தையில்லைகாலையில் எழுந்ததும், சூரியனை வழிபடுவதே 'சூரிய நமஸ்காரம்'. இயற்கை வழிபாட்டில் சூரிய வழிபாடே முதன்மையானது. காட்டில் வாழ்ந்த மனிதன் இருளைக் கண்டு பயந்தான். காலையில் சூரியனை கண்டதும் மகிழ்ச்சியோடு வழிபட்டு நன்றி கூறினான். இதுவே சூரிய வழிபாட்டின் தொடக்கம்.சூரிய வம்சம் சத்தியம், தர்மம், நீதி, நேர்மை கொண்டவர்கள் சூரிய வம்சத்தினர். இந்த குலத்தை சேர்ந்தவர்கள் அயோத்தியை ஆண்டனர். உண்மையை மட்டுமே பேசிய அரிச்சந்திரன், ஏழரைச் சனியின் பாதிப்பிலும் வழிதவறாத நளச்சக்கரவர்த்தி, பசுக்களுக்கு வாழ்வளித்த திலீபச் சக்கரவர்த்தி, சத்தியம், தர்ம வழியில் வாழ்ந்து காட்டிய ராமர் ஆகியோர் சூரியகுலத் தோன்றல்களே. கர்ணனும் சூரியனின் பிள்ளையே. சூரியனை வழிபடுவோருக்கு சூரியகுல மன்னர்களின் ஆசி கிடைக்கும். பலம் தரும் மந்திரம் “இருளைப் போக்கி ஆத்ம பலம் தரும் ஒளிச்சக்தி எதுவோ அதை நமஸ்கரிப்போம்” என சூரியனை ரிக்வேதம் போற்றுகிறது. காஸ்யப முனிவரின் மகனான சூரியன், வேதங்களில் உள்ள ஏழு சந்தங்களை ஏழு குதிரைகளாக்கி வான மண்டலத்தில் பவனி வருவதால், 'சப்தாஸ்தவன்' என அழைக்கப்படுகிறார். சூரியனின் தேருக்கு கருடனின் சகோதரன் மாதலியே சாரதியாக உள்ளார். கிரகங்களுக்கு தேவையான சக்தியை அளிப்பவர் சூரியனே. காயத்ரி மந்திரத்தின் மகிமையால் சூரியன் வானில் வலம் வருகிறார். நன்றி செலுத்தும் விழா விவசாயத்திற்கு துணைநின்ற சூரியன், மாடு, ஆகியவற்றுக்கு நன்றி செலுத்தும் விழா பொங்கல். கடல் நீரை ஆவியாக்கி மழை பொழிந்து, கிருமிகளை அழித்து ஆரோக்கியம் தருபவர் சூரியன். மண்ணில் வாழும் உயிர்களுக்கு உதவுபவர். அவருக்கு நன்றி செலுத்தும் நாளே பொங்கல். சூரியனுக்கு தைப்பொங்கலும், கால்நடைகளுக்கு மாட்டுப்பொங்கலும், உறவினர், நண்பர்களுக்கு காணும் பொங்கலும் உள்ளன.மாதம் முழுக்க மகிழ்ச்சி தை மாதத்தில் விசேஷ நாட்களுக்கு குறைவில்லை. சபரிமலையில் ஐயப்பன் மகர ஜோதியாக காட்சி தருவார். தை வெள்ளியன்று அம்மனுக்கு விரதம் இருந்து மாவிளக்கு ஏற்றுவர். தைஅமாவாசை அன்று முன்னோர்களை வழிபட்டு அவர்களது ஆசியை பெறுவர். பவுர்ணமியும், பூச நட்சத்திரமும் சேரும் தைப்பூச நாளில் காவடி, பால்குடம் எடுத்து முருகனின் அருளை பெறுவர்.அனுமனும் சூரியனும்அனுமனை சொல்லின் செல்வன் என்பார்கள். அவருக்கு குருநாதராக பாடம் நடத்திய பெருமை சூரியனைச் சேரும். ஒருமுறை பழம் என சூரியனை தவறாக கருதிய அனுமன், பூமியில் இருந்து வானத்திற்கு தாவினார். சூரியனின் இயக்கம் தடைபட்டு உலகமே அசையாமல் நின்றது. விஷயத்தை அறிந்த இந்திரன், தன் வஜ்ராயுதத்தால் அனுமனின் முகத்தில் ஓங்கியடிக்க அவருக்கு தாடை வீங்கியது. (அவரது முகம் மாறியதற்கு காரணம் இதுதான்) மயங்கிய நிலையில் இருந்த அனுமனைத் தாங்கிப்பிடித்தார் வாயுபகவான். (வாயு பகவானின் மகனே அனுமன்). தன் மகன் தாக்கப்பட்டதால் கோபப்பட்ட வாயு பகவானை இந்திரனும், சூரியனும் சமாதனப்படுத்தினர். அதோடு அனுமனுக்கு குருவாக இருந்து மந்திர உபதேசம் செய்தார் சூரியன். அன்று முதல் 'சர்வ வியாகரண பண்டிதன்' என்னும் சிறப்புப் பெயர் பெற்றார் அனுமன். இப்பெருமைக்கு காரணமானவர் சூரியன். ரஸ்மி கூறும் பெயர்கள்ரஸ்மி புராணத்தில் சூரியனுக்கு மித்திரன், ரவி, சூரியன், பானு, ககான், பூஷ்ணன், ஹிரண்ய கர்ப்பன், மரீசி, ஆதித்யன், சவித்ரு, அர்க்கன், பாஸ்கரன் என பன்னிரண்டு பெயர்கள் உள்ளன.தை பிறந்தது! வழி பிறந்தது!சுபநிகழ்ச்சிக்கு ஏற்ற மாதம் தை. இதற்கு காரணம் அறுவடை முடிந்ததும் விவசாயிகளிடம் பணம் இருக்கும். அதோடு வரப்பில் நடக்க வழியும் கிடைக்கும். இதனால் 'தை பிறந்தால் வழி பிறக்கும்' என்ற பழமொழி உருவானது.போகி செய்யும் புதுமை மார்கழியின் கடைசி நாளில் கொண்டாடப்படுவது போகி. “பழையன கழிதலும் புதியன புகுதலும்” என்பது வழக்கம். பழமையை விடுத்து மனிதன் புதுமைக்குள் செல்ல வேண்டும் என்பதை உணர்த்தும் நாள் இது. 'இன்று புதிதாய் பிறந்தோம்' என பாரதியார் சொல்வதை ஞாபகப்படுத்துகிறது. அதே நேரம் புதுமை என்னும் பெயரில் மேலைநாட்டு நாகரிகத்தை விரும்புவது புதுமை அல்ல. ஒழுக்கத்தை மையமிட்டு வாழ்வதே நாகரிகம். நம் கலாசாரம், பண்பாடுகளை இழக்காமல் வாழ்வதே போகி. இந்நாளில் வீட்டிற்கு வெள்ளையடித்து செம்மண் பட்டை பூசுவர். வீடு முழுக்க மாக்கோலம் இடுவர். அது ேபால நம் உள்ளத்தில் நல்ல சிந்தனை மலர்வதற்கு போகி வழிகாட்டுகிறது.பொங்கலோ பொங்கல்பொங்கல் என்ற உணவின் பெயரை பண்டிகைக்கும் வைத்திருப்பது வேடிக்கையாக தோன்றலாம். உண்மை தெரிந்தால் இதன் நுட்பம் புரியும். 'பொங்கு' என்னும் வேர்ச்சொல்லில் இருந்து வந்தது பொங்கல். இதற்கு வளம், செழிப்பு, மகிழ்ச்சி, ஆனந்தம் என்ற பொருளை குறிக்கும். இதன் அடிப்படையில் பொங்கல் பானை பொங்கும் போது 'பொங்கலோ பொங்கல்' என சொல்லி ஆரவாரம் செய்வர். அப்போது சுமங்கலிகள் மங்கல ஒலியாக குலவையிடுவர்.மகர சங்கராந்தி விளக்கம்கேரளாவிலும், வடஇந்திய மாநிலங்களிலும் பொங்கலை மகர சங்கராந்தி என்கின்றனர். 'கிராந்தி' என்ற சொல்லே 'கராந்தி' ஆனது. 'கிராந்தி' என்றால் மாறுதல். 'சங்' என்றால் 'நல்ல' என பொருள். 'நல்ல மாற்றம்' என்பதையே சங்கராந்தி என்கிறோம். சூரியன் மகர ராசியில் நுழையும் நல்ல நாளையே மகர சங்கராந்தி என்கிறார்கள். தை முதல் ஆனி வரையுள்ள ஆறு மாதங்கள் உத்ராயண புண்ணிய காலம் எனப்படும். இதில் சுபநிகழ்ச்சிகளை நடத்துவது சிறப்பு. ஒரு மாதம் ஒரு ராசி கிரகங்கள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட நாட்கள் வரை ஒரு ராசியில் சஞ்சரிக்கும். குரு ஓராண்டும், ராகு, கேது ஒன்றரை ஆண்டும், சனி இரண்டரை ஆண்டு காலமும் ஒரு ராசியில் தங்கியிருப்பர். இதுபோல சூரியன் ஒரு ராசியில் ஒரு மாதம் தங்குவார். இவர் மேஷ ராசியில் நுழையும் நாள் தமிழ்ப்புத்தாண்டு அதாவது சித்திரை முதல்நாள். ரிஷப ராசியில் நுழையும் நாள் வைகாசி. மிதுனத்தில் ஆனி, கடகத்தில் ஆடி, சிம்மத்தில் ஆவணி, கன்னியில் புரட்டாசி, துலாமில் ஐப்பசி, விருச்சிகத்தில் கார்த்திகை, தனுசுவில் மார்கழி, மகரத்தில் தை, கும்பத்தில் மாசி, மீனத்தில் நுழையும் போது பங்குனி என தமிழ் மாதங்கள் கணக்கிடப்படும். இவற்றில் மகரத்தில் நுழையும் நாளே மகர சங்கராந்தி என்னும் பொங்கலாக கொண்டாடப்படுகிறது.