உள்ளூர் செய்திகள்

மாட்டு வண்டியும் நானோ காரும்

இது இ(ணைய)ளைய தலைமுறைக்கு கிட்டாத அனுபவம்பண்டைக்கால இந்தியா, இலங்கை, இந்தோனேசியா, சீனாவில் வேளாண் பொருட்களை ஏற்றிச்செல்ல மாட்டு வண்டிகள் பயன்பட்டுள்ளன. மொகஞ்சதாரோ அகழாய்வில், மாட்டுவண்டிப் பொம்மை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இன்று வீடுகளில் கார்கள் இருப்பதுபோல், அன்று கவுரவத்தின் அடையாளம் மாட்டு வண்டிகள். இவை, மாடுகளின் இழுவைத்திறன் மூலம் இயங்குபவை. மரக்கட்டைகள், இரும்பு கொண்டு மாட்டுவண்டிகளை வடிவமைப்பர். வைக்கோல் சாம்பல், விளக்கெண்ணெய் கலந்து 'வண்டி மசகு' (கிரீஸ்) தயாரிப்பர். தினமும் வண்டியில் மாடுகளை பூட்டுவதற்கு முன், இரு சக்கரங்களையும் இணைக்கும் இரும்பு அச்சு, சக்கர குடங்களுக்குள் 'மசகு' தடவுவர். சக்கரங்களுக்கு அச்சாணி பொருத்தி, 'பூட்டு'ப் போடுவர். விளைச்சலை வீடுகொண்டு வந்து சேர்த்தல், வீடுகளிலிருந்து மாட்டுச்சாணம், கண்மாய் மண்ணை நஞ்சை, புஞ்சையில் கொட்டி மண்ணை பண்படுத்துவதற்கு மாட்டு வண்டியை பயன்படுத்துவர். நெல், பருத்தி மற்றும் இதர தானியங்களை பக்கத்து நகரங்களுக்கு ஏற்றிச்செல்வர்.இதையே 'மணப்பாறை மாடுகட்டி..., எனத்?துவங்கும் பாடலில் 'கருத நல்லா விளைய வெச்சு, மருத ஜில்லா ஆளவெச்சு, அறுத்துப்போடு களத்துமேட்டுல சின்னகண்ணு, நல்லா அடிச்சு துரத்தி அளந்து போடு செல்லகண்ணு, பொதிய ஏத்தி வண்டியில பொள்ளாச்சி சந்தையிலே, விருதுநகர் வியாபாரிக்கு சின்னக்கண்ணு, நீயும் வித்துப்போட்டு பணத்த எண்ணு செல்லகண்ணு...,'- என்று விளக்குகிறார் கவிஞர் மருதகாசி. பெண்ணிற்கு பிரசவ இடுப்புவலியா? மரம் ஏறியவர் கீழே விழுந்துவிட்டாரா? அடுத்த நொடியில் வரும் பதில், 'வண்டியை பூட்டுங்கப்பா... டவுன் ஆஸ்பத்திரிக்கு'; இக்காலத்து ஆம்புலன்ஸ் மாதிரி!பங்காளிகள் சொத்துப்பிரச்னையா? எட்டுப்பட்டிகளுக்கு இடையே பொதுப்பிரச்னையா? மாட்டுவண்டிகள் சாரைசாரையாக அணிவகுக்கும்.கோயில் விழாக்களுக்கு நெடும்பயணம் மேற்கொள்ள, மூங்கில், வாகை மரக்குச்சிகளை வில்லாக வளைத்து, வண்டிகளில் கூடாரம் அமைப்பர். மேல் பகுதியில் மழை, வெயிலுக்கு பாதுகாப்பாக பனை ஓலைபாய், தார்பாய்களை போர்த்திவிடுவர். வண்டியில் வைக்கோலை பரப்பி, ஜமுக்காளம் விரிப்பர். அதில் குடும்பத்தினர் அமர்ந்துகொள்வர். அருகே பாத்திரங்கள், சமையல் சாமான்கள். இரவு பயணத்திற்கு வழிகாட்டவும், பூச்சிகளிலிருந்து பாதுகாக்கவும் வண்டிக்கு அடியில் அரிக்கேன் விளக்கு தொங்கும். மாடுகளுக்கு கழுத்தில் மணி கட்டி, காலில் சலங்கை கட்டி 'சல்சல்'...,சத்தத்துடன், கதைகள் பேசியவாறு பயணிப்பர். பகலில் ஆங்காங்கே தங்கி சமைத்து சாப்பிட்டு விட்டு, பயணம் தொடரும் பலநாட்கள். மாப்பிள்ளை, மணப்பெண் அழைப்பிற்கும் இந்த கூடார வண்டிகள்தான். 'வண்டிமாடு எட்டுவச்சு முன்னே போகுதம்மா, வாக்கப்பட்ட பொண்ணு மனம் பின்னே போகுதம்மா..., அண்ணே போய்வரவா, மண்ணே போய்வரவா, மாமரமே போய்வரவா, சட்டப்படி ஆம்பளைக்கு ஒத்த இடம் தானே; தவளைக்கும், பொம்பளைக்கும் இரண்டு இடம்தானே...,' என மணப்பெண்ணின் ஏக்கமாக பாடல் பிறந்ததும், இந்த வண்டியில்தான்.சினிமா தியேட்டர்களில் இன்று கார், டூவீலர்கள் நிறுத்த தனி இடம் உள்ளது போல், மாட்டுவண்டிகள் நிறுத்த தனி இடம் இருந்தது ஒருகாலம். ஊரில் பாண்டியை பார்க்க வேண்டும் என அந்நியர் ஒருவர் தேடி வந்தால், பெரியவீட்டு பாண்டியா? 'வண்டிக்கார' பாண்டியா? என அடைமொழி பெற்றுத்தந்தவை இவ்வண்டிகள்.ஜமீன்கள், வசதிபடைத்தவர் வீடுகளில் இருந்த 'வில்லு'வண்டிகளை, பயணத்திற்கு மட்டுமே பயன்படுத்த முடியும். தகரத்தால் ஆன நிரந்தர கூடாரம், உள் பகுதியில் தோல் பொருட்களால் அலங்காரம் செய்யப்பட்டிருக்கும். பொருட்கள் வைக்க பெட்டி இருக்கும். முன், பின் பகுதியில் திரை தொங்கவிட்டிருப்பர். கைப்பிடிக்கு கம்பி இருக்கும். வண்டியில் ஏற பின் பகுதியில் படி போன்ற அமைப்பு. முன் பகுதியில் வண்டி ஓட்டுபவர் அமர 'கோஷ்' பெட்டி. இந்த மாடுகளை, விவசாய வேலைக்கு பயன்படுத்தமாட்டார்கள்.வாகன வரவால், மாட்டு வண்டிகள் குறைந்துவிட்டன. மதுரை சித்திரைத் திருவிழா மற்றும் சில திருவிழாக்களுக்கு சுற்றுச்சூழலுக்கு கேடுவிளைவிக்காத கூடார வண்டிகளில், கிராமத்தினர் இன்றும் பயணம் செய்கின்றனர். இன்று ஒரு ஜோடி மாடு, வண்டி விலை, ஒரு லட்சம் ரூபாய் நானோ காருக்குச் சமம். -பாரதி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்