பொங்கும் பொங்கல் நினைவுகள்
தினமும் ஆர்ப்பாட்டம், அறிக்கை, மேடை பேச்சு என தீவிர அரசியலில் இருக்கும் தலைவர்களின் இளமை கால பொங்கல் எப்படி? அவர்களின் பொங்கல் ஞாபகங்களை கேட்ட போது...பூசணி பூ பார்க்க... பூரிப்பு தோன்றும்!: அப்பா ராமசாமி விவசாயி. நெல்லை ஸ்ரீவைகுண்டத்தில் எங்களுக்கு பூர்விக நிலங்கள் உள்ளன. தை மாதம் அறுவடை முடிந்து விவசாயிகள் விழா கொண்டாடுவர். பெற்றோருக்கு என்னையும் சேர்த்து நான்கு ஆண்கள், ஆறு பெண்கள். மார்கழி முழுவதும் வீட்டு வாசலில் என் சகோதரிகள் கோலம் போட்டு சாணத்தில் பூசணி வைப்பர். பார்க்க பூரிப்பு தோன்றும். இன்றும் கிராமங்களுக்கு சென்றால் வாசலில் பூசணி பூ வைத்ததை பார்க்கலாம். பொங்கலுக்கு மறுநாள் அதை ஆற்றில் கரைப்போம். வீட்டை வெள்ளை அடித்து புதிதாக்கி விடுவோம். திருமணமாகி செல்லும் பெண்களுக்கு பிறந்த வீட்டிலிருந்து சீர் போகும். நானே திருநெல்வேலியிலுள்ள என் அக்காவிற்கு சீர்கொடுத்திருக்கிறேன். ஊருக்கு பக்கத்திலுள்ள பத்மநாப மங்கலம் மலை அடிவாரத்தில் மாடுகளை மேய்ச்சலுக்கு விடுவோம். இப்போதும் பொங்கலுக்கு ஊருக்கு போய் விடுவேன்.- ஆர்.நல்லகண்ணு, தேசிய குழு உறுப்பினர், இந்திய கம்யூ. ,மாட்டு வண்டி சவாரி மறக்குமா: தஞ்சை மாவட்டம் சுந்தரப்பெருமாள்கோயில் தான் என் சொந்த கிராமம். இளம் வயதில் பொங்கல் பண்டிகை என்றால் பத்து நாட்களுக்கு முன்பே வீட்டில் அந்த உணர்வு எங்களை தொற்றிக்கொள்ளும்.வீட்டுக்கு முன் தாழ்வாரத்தில் வண்ணக்கோல அலங்காரமிட்டு கரும்புகள் வைத்து மண்பானையில் பொங்கும் பொங்கலுக்காக காத்திருப்போம். திசை பார்த்து பொங்கியவுடன் அம்மா, பாட்டி மற்றும் உறவுப் பெண்கள் கூடி ஒரே குரலில் 'குலவை' போடும்போது நாங்களும் சேர்ந்து ஊ...ஊ.... என கத்துவோம். பொங்கலை சுவைப்பதற்கு முன் கரும்பை தின்பதிலும் கடும் போட்டி. அடுத்து நடக்கும் மாட்டுப் பொங்கலை ஒருவித 'திகிலோடு' தான் எதிர்நோக்குவோம். குளிப்பாட்டிய மாட்டின் நெற்றியில் பயந்துக்கிட்டே கலர் கலர் பொட்டு வைத்து அலங்கரிப்பதில் போட்டி ஏற்படும். சென்னையில் காரில் சுற்றினாலும் பொங்கலுக்கு கிராமத்துக்கு சென்று மாட்டுவண்டியில் செய்த சவாரியின் சுகத்தை இன்னும் என்னால் மறக்க முடியவில்லை. கட்சிக்கு வந்த பின் சென்னையில் 'மாடர்ன்' பொங்கலை தான் கொண்டாட முடிகிறது.- வாசன், முன்னாள் அமைச்சர், த.மா.கா.,மஞ்சு விரட்டு மாடு பிடித்திருக்கிறேன்!: காரைக்குடி அருகே மாத்தூர் தான் சொந்த ஊர். அப்பா ஹரிஹரன் பேராசிரியராக இருந்தாலும் விவசாயமும் செய்தார். வீட்டில் பசு, காளைகள் இருக்கும். பொங்கல் என்றாலே கொண்டாட்டம்தான். கிராமங்களில் பொங்கலை விட மறுநாள் மாட்டு பொங்கல் தான் பொங்கல் திருவிழா போல இருக்கும். அன்று காலையில் பசு, காளைகளை குளிப்பாட்டி கொம்புகளில் வர்ணம் தீட்டி, அதில் புதிய வேட்டி, துண்டுகளை கட்டி ஊரிலுள்ள தொழுவத்தில் நிறுத்துவோம். மஞ்சு விரட்டு விடுவர். முதலில் கோயில் மாடுகளை அவிழ்த்து விடுவர். அப்புறம் மற்ற மாடுகளை விடுவர். என் 16 வயதில் மாடுகளை அவிழ்த்து விட்டிருக்கிறேன். மஞ்சு விரட்டு மாடுகளை பிடித்தும் இருக்கிறேன். இன்றைக்கும் என் பண்ணையில் மாடுகளை வளர்த்து வருகிறேன். தை மாதம் வயல்களில் அறுவடை நடந்து விளைந்த நெல்லை அரைத்து பொங்கல் வைத்து சாப்பிடும் விவசாயிகளுக்கு தான் எவ்வளவு மகிழ்ச்சி.- எச்.ராஜா, தேசிய செயலாளர், பா.ஜ., காட்சிப்பொருட்கள் கண்ணில் மங்கலாய்!: விதை நெல்லை தொலைத்து விட்டு விவசாயத்தை பற்றி கவலைப்படுவது போல... கொண்டாட்டத்தை தொலைத்து விட்டு நிற்கிறோம். தாயின் தலைமையில் ஆட்சி இன்றி, தமிழர் திருநாளை யோசித்து பார்க்கவே மனம் வெதும்புகிறது. பால்ய காலத்து நினைவுகளை மீட்டெடுக்கும் ஆசையில் காட்சிப் பொருளாக விரிந்தால்... கண்ணில் நீர் கோர்த்து காட்சிகள் மங்கலாகத் தெரிகிறது. குத்துப்பட்ட பம்பரம், கிளித்தட்டு, ஒத்தையா, ரெட்டையா, கிட்டி பிள்ளை என்று நம்மை விட்டு கடந்து போன பிம்பம் நம்மை மீண்டும் அழைப்பது போல பொங்கல் திருநாளை திரும்பி பார்க்கிறேன். பொங்கல் என்றாலே வெள்ளையடித்து வீடு சுத்தமாகும். தை... தை... என்று தை மகள் அழகுபட வந்து புத்தாடை, புதுப்பானை, புது அரிசி என்று புதிய வாழ்க்கைக்கு பிள்ளையார் சுழி போடும். பிறகு உழவர் திருநாள். காளைக்கும், பசுவிற்கும், மாடுகளுக்கும் கொம்புகளில் வர்ணம் பூசி கரும்பிட்டு பொங்கல் வைத்து வணங்கும் கண்கொள்ளாக் காட்சி அகலும் முன்னே காணும் பொங்கல் வந்து விடும். குல தெய்வ வழிபாடு... மூத்தோரிடம் சென்று வாழ்த்து பெறுவது... ஆறுகள், குளங்கள், சுற்றுலாத் தலங்கள் என மகிழ்ச்சியுடன் கடக்கும் காணும் பொங்கல். கடந்து போன நினைவுகளை நிகழ்காலத்துடன் ஒப்பிட்டால் நம்மை ஒவ்வொரு நாளும் தோற்கடிக்கும் நம்முடைய இளமை போல... ஏதோ ஒரு அடையாளத்தை நமக்கு காலம் விட்டு செல்கிறது.- முனைவர் வைகைச்செல்வன், முன்னாள் அமைச்சர், அ.தி.மு.க.,வில் வண்டியில் சென்ற பசுமை நினைவு: பொங்கல் எனும்போது என் இளைமைக்காலம் என் நெஞ்சை வருடுகிறது. அரைக்கால் ஆடை அணிந்த சிறுவனாக இருந்தபோது, என் பாட்டனார் வீட்டின் தொழுவத்தில் பசு, காளைகள் என நூறு மாடுகள் இருக்கும். உழவுக்காக ஏரில் காளைகளை பூட்டி உழவடை செய்வர். அதை காண வில் வண்டியில் புறப்பட்டு செல்வோம். அந்த பசுமையான நினைவுகள் என் நெஞ்சில் ஆழமாக பதிந்து விட்டது. நூறு மாடுகளில் சில பொலி மாடுகளும் உண்டு. அவற்றை உழவடைக்கு பயன்படுத்தியதில்லை. தவிர மூன்று காளைகள் இருந்தன. அதை பார்த்தவர்கள் அச்சப்படுவார்கள். அந்தளவிற்கு மூர்க்கத்தனமாக இருந்தது. இப்போது ஐந்தாறு மாடுகள் மட்டும் தானே வீட்டு தொழுவத்தில் உள்ளது என எண்ணும் போது. அந்தக்காலம் எங்கே போனது? என நினைவலைகள் திரும்பி பார்க்கின்றன. எனது கிராமமான கலிங்கப்பட்டியில் இருந்து 3 கி.மீ., தொலைவில் உள்ள திருவேடகம் கிராமத்திற்கு டூரிங் தியேட்டரில் படம் பார்க்க போவோம். மணலை குவித்து அதில் உட்கார்ந்து படம் பார்த்த இன்பம் இன்று இராது. பொங்கல் நாட்களில் என் ஊர் மக்களுடன் பொங்கல் கொண்டாடுவதில் கிடைக்கும் இன்பம் வேறெதிலும் இல்லை.- வைகோ, ம.தி.மு.க., பொதுச்செயலாளர்