கட்டுமஸ்தான கலப்பை விநாயகர்
உருண்டு திரண்ட தோள்வலிமை, இடுப்பில் இறுக்கிக் கட்டிய வேட்டி, ஒட்டிய வயிறு, மேலாடையின்றி தலையில் கட்டிய முண்டாசு... ஐ.எஸ்.ஐ., முத்திரை குத்தாவிட்டாலும் விவசாயியின் அடையாளம் இவை தான்.நானும் ஒரு விவசாயி தான் என்பது போல கையில் கலப்பையுடன் கட்டுமஸ்தாக காட்சி தருகிறார் விநாயகர். ஆவலும், ஆச்சரியமும் ஏற்படுகிறதா... மதுரை திருமங்கலத்தில் செங்கப்படை அருகில் உள்ள சிறுகிராமம் கரிசல் காலன்பட்டி. இங்கு விவசாயத்தோடு உயிர் உரம் உற்பத்தி செய்து வரும் விவசாயப் பட்டதாரி மூர்த்தியின் நிலத்தில் தான் விநாயகர் ஒய்யார அழகுடன் காட்சிதருகிறார். எப்படித் தோன்றியது இந்த சிந்தனை என்றதும்... கனவில் இந்த உருவத்தில் தான் விநாயகர் நடந்து வந்தார் என்று நம்மை மிரட்டினார். நம் பார்வையின் கேள்வியில் பதிலை அவரே தொடர்ந்தார்.''உண்மையைச் சொன்னால் உளறுகிறேன் என்கின்றனர். என் மகன்கள் சரவணன், கார்த்திக் சிறுவர்களாக இருக்கும் போது அடிக்கடி கோவிலுக்கு அழைத்துச் செல்வேன். முருகன் அழகான உருவத்தில்இருப்பதைப் போல விநாயகர் ஏன் இல்லை என பிள்ளைகள் அடிக்கடி கேட்பர். நான் எங்கப்பாவிடம் உணர்வுபூர்வமாக பயஉணர்வுடன் பழகினேன். அதனால் கேள்வி கேட்க தெரியவில்லை. என் பிள்ளைகள் அறிவுபூர்வமாக என்னோடு பழகியதால் கேட்க ஆரம்பித்தனர்.1993ல் இந்த கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை. ஆனால் யோசிக்க வைத்தது.கேள்விகளை ஆழ்மனதிற்குள் அனுப்பி விட்டு அமைதியாகி விட்டேன். அதுதான் கனவாக உருவெடுத்து நடந்து வந்தது என நினைக்கிறேன்.அதன்பின் செயல்படுத்த நினைத்து கேரளா பாலக்காட்டில் இருந்து கருங்கல்லை கொண்டு வந்தேன். மாமல்லபுரத்தில் உள்ள ஒரு சிற்பியிடம் கொடுத்து என் மனதில்தோன்றிய விநாயகரை விவரித்தேன். வித்தியாசமாக என்னைப் பார்த்துவிட்டு ஓடிவிட்டார். இரண்டாவது சிற்பி கலப்பையும், முண்டாசுமாக செய்து கொடுத்தார். ஆனால் வயிறு பானை வயிறாகவே இருந்தது. மீண்டும் மதுரை பசுமலை சிற்பிகளிடம் சென்றேன். எனது விவசாய விநாயகருக்கு விடை தந்தனர்.கட்டுமஸ்தான உடலுடன் உண்மையான விவசாயியாக மாறினார். என் பிள்ளைகளின் கேள்விகளுக்கு பதில் தந்த சந்தோஷம் எனக்கு. ௨௦௧௦ல் எங்கள் நிலத்தில் வைத்து பிரதிஷ்டை செய்து வழிபடுகிறோம்.ஒரு மனிதன் உடை, இருப்பிடம் இல்லாவிட்டாலும் உயிர் வாழமுடியும். உணவின்றி முடியாது. எனவே உணவு தான் முதற்கடவுள். உணவு தருபவர் யாரோ அவரே முழுமுதற்கடவுள். உலகத்து உயிர்களுக்கு படியளக்கும் தொழில் செய்பவர்கள் விவசாயிகள் தான். அதனால் விநாயகரும் விவசாயியாகத் தான் இருக்க வேண்டுமென கலப்பையுடன் உருவாக்கச் சொன்னேன். உடல் உழைப்பு செய்பவர்களிடம் எப்போதும் தோளில் துண்டு இருக்கும். இல்லாவிட்டால் துண்டு முண்டாசாக தலையை சுற்றியிருக்கும். விவசாயி ஏர் உழும் போதும், களையெடுக்கும் போதும் தலையில் நேரடியாக வெயில் படுவதை முண்டாசு தடுத்துவிடும். உழைப்பின் வியர்வை பெருகும் போது முண்டாசை கழற்றி துடைத்துக் கொள்வர்.இந்த விவசாயியின் உண்மையான உழைப்பை விநாயகர் வடிவில் எடுத்துக் காட்டியுள்ளேன். எங்க ஊரு மக்களும் கலப்பை விநாயகர் என்று தான் செல்லமாக அழைக்கின்றனர்,'' என்றார்.தொடர்புக்கு: 93671 12943