நன்றி உணர்வைக் காட்டுவோம் : சிவானந்தர் பொங்கல் ஆசி
'சங்க்ரமனம்' என்ற சொல்லுக்கு 'நகர ஆரம்பித்தல்' என்பது பொருள். சூரியன் தென்திசையில் இருந்து வடதிசைக்கு நகரும் நாளே மகரசங்கராந்தியாக கொண்டாடப்படுகிறது. தமிழர்கள் இந்நாளை பொங்கல் திருநாளாக கொண்டாடி மகிழ்கின்றனர். உழைப்பின் பயனால் விளைந்த நெல்மணிகளைக் கொண்டு பொங்கல் இட்டு முதலில் கண்கண்ட தெவமான கதிரவனைப் பூஜிக்கிறோம். காலம் தவறாமல் தினமும் கீழ்வானில் உதிக்கும் சூரியனை வழிபட்டு கடமையுணர்வை நாம் பெறுகிறோம்.
பொங்கல் பானையில் பொங்கிவரும் வேளையில் 'பொங்கலோ பொங்கல்' என்று குரல் எழுப்புவர். இதன்மூலம் நம் இல்லங்களிலும் உள்ளங்களிலும் மகிழ்ச்சி பொங்குகிறது. விவசாயத்திற்குத் துணைபுரியும் கோமாதாவான பசுமாடும், பணியாட்களும் நம் உற்ற உறவினர்களே என்ற பாசநேச உணர்வை நம்முள் உருவாக்குகிறது. தான், தன்குடும்பம் என்ற சுயநலத்தை விடுத்து மனிதன் நாம், நம்மவர்கள் என்ற பரந்தநிலைக்கு தங்களை உயர்த்திக் கொள்ளவேண்டும் என்பதே இவ்விழாவின் நோக்கமாகும்.
தை மாதத்தின் முதல்நாள் என்பதால் முன்னோர்களை நன்றியுணர்வுடன் வழிபாடு செவது அவசியம். பாண்டவர்களின் பிதாமகரான பீஷ்மர், குரு÷க்ஷத்திர யுத்தத்தில் காயம் அடைந்து அம்புப்படுக்கையில் கிடந்தார். எப்போது உத்ராயண புண்ணியகாலமான சங்கராந்தி நாள் வரும் என்று உயிரைத் தன் கையில் பிடித்துக் கொண்டு இருந்தார். பெற்ற தந்தையின் நல்வாழ்வுக்காக திருமணமே செய்யாமல் வாழ்வை தியாகம் செய்தவர் அவர். தியாகசீலரான பீஷ்மருக்கு நம் அஞ்சலியை இந்நாளில் செலுத்தவேண்டியதும் நம் கடமை.