உள்ளூர் செய்திகள்

வண்ணங்களின் நாயகி!

அழிந்து போய் கொண்டிருப்பதாக கருதப்படும் நாடோடி கதைகளில் இடம்பெறும் கதாபாத்திரங்களை வண்ண ஒவியமாக்கி, மர சிற்பமாக்கி கண்காட்சிகள் நடத்தி வருகிறார் திருவனந்தபுரத்தை சேர்ந்த காயத்ரி அஜித். மாடலிங் அழகியாகவும் சாதிக்கும் இவர் பாரம்பரிய கலைகளின் சிறப்புகளையும், நமது காவியங்களின் தொன்மையையும் தேடிப்பிடித்து அதனை படித்து ஓவியமாக்குகிறார்; டிசைன் செய்து சிற்பமாக்கி இளையதலைமுறைக்கு காட்சிப்படுத்துகிறார்.காயத்ரி அஜித் கூறியதாவது:சிறுவயதில் இருந்தே வண்ணங்கள் என்றால் கொள்ளை பிரியம். 'லைட் கலர்' எல்லாம் இல்லை...படு பயங்கரமான கலர், அதுவே விருப்பம். அப்படித்தான் ஓவியங்கள் வரைவதில், அதுவும் அதிக வண்ணங்களில் கலவையாக வரைவதில் ஆர்வம் உருவானது.பள்ளிப்பருவத்திலேயே கைவினைப்பொருட்கள் உருவாக்குவதும் எனது பொழுதுபோக்காக இருந்தது. தற்போது சான்றிதழ் பெற்ற ஆர்ட்டிஸ்ட் ஆக உள்ளேன்.நமது நாட்டுப்புற கதைகளில் இடம்பெற்ற கதாபாத்திரங்களை நாம் பார்த்தது இல்லை; அதனை பற்றி ஆய்வு செய்து படித்து கற்பனையாக வரைய ஆரம்பித்தேன். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.கேரளாவின் வடக்கு பகுதியில் உள்ள தெய்வீகக்கலை 'தெய்யம்'. கதகளி, பரதநாட்டியம் போல் அல்லாது இதில் வித்தியாசமாக கடவுள் உருவத்தை வரைந்து தான் நடனமாடுவார்கள். அந்த உருவம் பல வித வண்ணங்களால், சிவப்பு கொஞ்சம் துாக்கலாக, பல்வேறு நுட்பமான ஓவியச்சிறப்புடன் இருக்கும். அதனை முதலில் ஓவியமாக வரைவேன்; பின்னர் மரத்தில் செதுக்கி வண்ணம்இடுவேன்.கதகளி சிற்பத்தை போல தெய்யம் சிற்பத்தையும் வீட்டில் அலங்காரப்பொருளாக கேரளாவில் வைப்பதுண்டு. இந்த மாதிரி கலை சிற்பங்களை வெளிநாட்டினர் வாங்குகின்றனர்.நான் வரைந்த ஓவியங்களுக்களும், உருவாக்கிய கைவினை பொருட்களுக்காக திருவனந்தபுரத்தில் 'பர்ப்பிள் யாளி' என்ற ஆர்ட்ஸ் அன்ட் கிராப்ட் நிறுவனத்தை துவக்கி உள்ளேன். இதற்காக ஸ்டுடியோ, தொழிற்கூடத்தையும் உருவாக்கி விட்டேன். இங்கு மரம், வெண்கல சிற்பங்கள் செய்பவர்கள், கைவினைக்கலைஞர்கள் என்னோடு பணிபுரிகின்றனர். சில கோயில்களுக்கு பெரிய விக்ரகங்களும் வடிவமைத்து தந்திருக்கிறோம்.வெள்ளை தேக்கு, மகாகனி மரத்தில் தான் அதிக சிற்பங்கள் செய்கிறோம். கல்கியுகத்தில் அவதரித்த பீமாதேவி சிற்பத்திற்காக வரைந்து டிசைன் செய்ததை பெருமையாக கருதுகிறேன். இதற்காக தேவிபாகவதம் படித்து அதில் வரும் பெண் தெய்வத்தை மனக்கண்ணில் நிறுத்தி வரைந்தேன். ஒரு மரத்தின் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் மகாகனி மரப்பலகையில் நான் உருவாக்கிய 'ஹேண்ட் மேட் மிரர்' வரவேற்பை பெற்றுள்ளது. பி.ஆர்க்., படித்துள்ள நான் இன்டீரியர், ஜூவல்லரி டிசைனராகவும் இருக்கிறேன். விரும்புபவர்களுக்கு பர்னிச்சர் டிசைன் செய்து தருகிறோம். மாடலிங் எனது பொழுதுபோக்கு என்கிறார் வித்தியாசமான 'கிரியேட்டிவிட்டியுடன்' புதுமையை தேடி பறந்து கொண்டிருக்கும் காயத்ரி அஜித்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்