உள்ளூர் செய்திகள்

ஜெர்மனியின் செந்தேன் மலர்... - தமிழ் பெண் சுகந்தி

ஜெர்மனி மேடைகளை பரத நாட்டிய கலையால் அலங்கரிக்கிறார் மதுரையைச் சேர்ந்த சுகந்தி ரவீந்திரநாத்.அவர் கூறியது: நான் பிறந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே நிலமளகியமங்கலம் கிராமம். அங்கிருந்து படிப்பிற்காக குடும்பத்துடன் மதுரைக்கு வந்தோம். திருப்பரங்குன்றம் அரசு பெண்கள் பள்ளியில் பள்ளிபடிப்பை முடித்தேன். கூடல்நகர் சதங்கையில் பரதநாட்டியத்தில் டிப்ளமோ முடித்தேன். வீணை, கர்நாடக சங்கீதம், ஹிந்தி, சமஸ்கிருதம் கற்றுக்கொண்டேன்.தந்தை உடல்நிலை காரணமாக குடும்ப பொறுப்பு என்னிடம் வந்தது. பகுதி நேர வேலையாக மதுரையில் ஒரே நேரத்தில் ஆறு பள்ளிகளில் நடன ஆசிரியராகவும் பணிபுரிந்தேன்.எனது கணவர் ஜெர்மனியை சேர்ந்த தமிழர். அங்கு அரசு பணியில் உள்ளார். கலைத்துறையில் உள்ள பெண்ணைதான் திருமணம் முடிப்பேன் என உறுதியாக இருந்தார். அவரை சந்தித்ததே சதங்கையில் நடந்த கலை நிகழ்ச்சியில் தான். வீட்டில் முறைப்படி பெண் கேட்டு என்னை திருமணம் செய்து ஜெர்மனிக்கு அழைத்து சென்றார். எங்களுக்கு நான்கு குழந்தைகள். அவர் சொன்ன ஒரு வார்த்தை தான் என்னை மாற்றியது. கலையை வளர்க்க நீ கற்றுக்கொண்டதை உன்னோடு நிறுத்திக்கொள்ளாதே; பிறருக்கும் அதை கற்றுக்கொடு என்றார். அதனால் ஜெர்மன் மொழியை கற்றுக் கொண்டேன்.ஜெர்மனியில் அறிவாலயம் என்ற பெயரில் தமிழ் பள்ளிக்கூடம் துவங்கினேன். அங்கு 1 முதல் 12 ம் வகுப்பு வரை உள்ளது. அதில் ஹிந்து மதம், தமிழ் பாடங்களை இலவசமாக கற்றுக் கொடுத்தேன். அடுத்து ஜெர்மனி தமிழ்ச் சங்கத்தை துவங்கினேன். பின்னர் நாட்டியஸ்வரலயா பைன் ஆர்ட்ஸ் அகாடமியை ஆரம்பித்தேன். இதில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் தமிழ் மூலம் பரதநாட்டியம் பயிற்சி பெற்று வருகின்றனர். ஜெர்மனியில் நடக்கும் அரசு விழாக்களில் ராமாயணம், மகாபாரதம், கண்ணகி, பாஞ்சாலி சபதம் உள்ளிட்டவைகளை நாட்டிய நாடகங்களாக அரங்கேற்றியது எனக்கு பெருமை. இன்டர்நேஷனல் டான்ஸ் கல்ச்சுரல்ஸ் என்று கோடைக்கால கலாசார திருவிழாவை ஜெர்மனி அரசு ஆண்டுக்கு ஒரு முறை நடத்தும். நான் அதில் தவில், நாதஸ்வரம் வைத்து தமிழ் பரதநாட்டியம் மட்டுமின்றி மானாட்டம், மயிலாட்டம், கூத்துக்கலை, பொம்மலாட்டம் என நம்முடைய கலைகள் அனைத்தையும் அரங்கேற்றினேன்.ஜெர்மனி ஹம் நகரில் காமாட்சி அம்மன் கோயில் உள்ளது. அங்கு 20 வருடங்களாக பரதநாட்டியம் ஆடி வருகிறேன். இந்த நாட்டியத்தின் பெயர் தேவதாசி நாட்டியம். இந்த நாட்டியத்திற்காக எனக்கு திருக்கோவில் தேவ நர்த்தகி விருது வழங்கினர்.ஐரோப்பா கலாசார பிரிவு சார்பில் நாட்டிய கலா நர்த்தகி, நாட்டிய கலாமணி, நாட்டிய கலா பாரத் விருது வாங்கி உள்ளேன். பரதநாட்டியம் கற்றுக்கொள்ளுங்கள், பரதநாட்டியம் வழிகாட்டி என ஐந்து நுால்கள் எழுதியுள்ளேன்.ஜெர்மனியில் 5 நகரங்களில் என்னுடைய நாட்டியஸ்வரலயா பள்ளி இயங்கி வருகிறது. நான் பயிற்றுவித்த கலை தற்போது பல ஊர்களில் என் மாணவர்கள் மூலம் கற்றுக் கொடுக்கப்படுவதே இக்கலைக்கு நான் செய்யும் தொண்டு என்றார். இவரை வாழ்த்த suganthiravendranath@gmail.comஆர்.அருண் முருகன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்