வாசலிலே பூசணிப் பூ - களை கட்டும் சிறுவீட்டுப் பொங்கல்
சங்க இலக்கியங்களில் சுட்டிக் காட்டப்பட்டுள்ள 'தை நீராடல்' எனும் 'சிறுவீட்டு' பொங்கல் நிகழ்ச்சி, பூ எருவாட்டி திருவிழாவாக பரிணாமம் பெற்று, திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பகுதியில் பாரம்பரியமாக நடந்து வருகிறது.பொங்கல் விழா பிறப்பு, இறப்புத் தீட்டுக்களால் பாதிக்கப்படாத திருவிழா என்பது பலர் அறியாத செய்தி. பொங்கல் அன்று ஒருவீட்டில் இறப்பு நிகழ்ந்தாலும் இறந்தவர் உடலை எடுத்துச் சென்று, வீட்டைச் சுத்தம் செய்து பொங்கல் படைக்கும் வழக்கம் நடந்து வருவதே இதற்குச் சான்று.தைப்பொங்கலையொட்டி வரும் சந்தி மறித்து பொங்கல், சப்த கன்னி பொங்கல் வரிசையில் தை நீராடல் மற்றும் 'சிறுவீட்டு' பொங்கல் இயற்கை சார்ந்த திருவிழாவாக நடந்துள்ளதாக, சங்க இலக்கியங்கள் சுட்டிக்காட்டுகின்றன. வத்தலக்குண்டு அருகே 100 குடும்பங்கள் வசிக்கும் கீழக்கோயில்பட்டியில், இந்தச் சங்ககால விழா, 'பூ எருவாட்டி' திருவிழாவாக, 'சிறுவீட்டு' பொங்கல் எனப் பரிணாமம் பெற்று நடந்து வருகிறது.சங்க இலக்கிய ஆதாரம் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையின் முன்னாள் பேராசிரியர் தொ.பரமசிவன் எழுதிய 'பண் பாட்டு அசைவுகள்' என்ற நூலில் தைப்பூசம் என்ற தலைப்பில், சங்க இலக்கியங்களில் 'சிறுவீட்டு' பொங்கல் குறித்தும், தைநீராடல் குறித்தும் எழுதி உள்ளார். 'ஆண்டாளின் முப்பது நாள் திருப்பாவை விரதம் மார்கழி பவுர்ணமி அன்றே துவங்குகிறது. எனவே, திருப்பாவை விரதம் தை மாத பவுர்ணமியில் நிறைவு பெற்றிருக்க வேண்டும். அந்நாட்களில் 'பாற்சோறு மூட நெற்பெய்து' (பாற் பொங்கலிட்டு) உண்டு களித்திருக்க வேண்டும். மார்கழி நீராட்டைப் போலவே, தை நீராட்டும் பெண் பிள்ளைகள் நோன்பிருந்து 'சிறுவீடு' கட்டிப் பொங்கலிட்டுக் கொண்டாடிய ஒரு பழைய வழக்கத்தை வைணவ மதத்தினர் தனதாக்கி மார்கழி நீராட்டாக மாற்றி உள்ளனர். இது பெண்களுக்காக கொண்டாடப்படுவதால், பூ வைக்கும் வீடுகளில் தைப்பூசத் திற்குள் தனிப் பொங்கல் வைக்க வேண்டும். இப்பொங்கல் தலை வாசலில் வைக்காமல், வீடு முற்றத்தில் களிமண்ணால் சிறு வீடு கட்டி, அதன் முன்பாக பொங்கல் வைத்து முடிந்ததும், பூ எரு தட்டுகளை இளம் பெண்கள் எடுத்துச் சென்று நீர் நிலைகளில் விடுவர்' இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.பெண் வாரிசு வீடுகள் மார்கழி மாதத்தில் வாசலில் கோலமிட்டு பூசணி, செம்பருத்தி, எக்காளம் (எருக்கு) பூக்களை சாண உருண்டையில் சொருகி, கோலத்தின் நடுவே வைக்கும் பழக்கம், பெண் வாரிசுகள் உள்ள வீடுகளில் உள்ளது.சாண உருண்டைகளை அன்றே எருவாட்டியாக்கி, பூசணி பூக்களை நான்காக கிழித்து, அதன் மீது ஒட்டி காய வைத்து 'பூ எருவாட்டி'யாக தயாரிப்பர். இப்படி மார்கழி மாதம் முழுவதும் பூ எருவாட்டியை சேமித்து வைப்பர்.பொங்கல் முடிந்த மூன்றாம் நாள், கோயில் முன்பாக, பூ எருவாட்டி தட்டுகளை வட்டமாக வைத்து 'தானானே, தானானே' என கும்மியடித்து, தெம்மாங்கு பாடி மகிழ்கின்றனர். அருகில் உள்ள மருதாநதியில் எருவாட்டி மீது வெற்றிலையை வைத்து சூடமேற்றி குலவைச் சத்தத்துடன் நீரில் விடுகின்றனர். கிராமத்துப் பெரியவர் பழனிச்சாமி, 96, கூறியதாவது: தலைமுறை, தலைமுறையாக இந்நிகழ்ச்சி நடக்கிறது. பொங்கல் திருவிழாவில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்காக முன்னோர்கள் இவ்வழக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாக நினைக்கிறேன்,” என்றார்.பி.ஸ்தானிக பிரபு