தமிழ் மண்ணின் பிறப்பு... சிறுதானியங்களே சிறப்பு - குடும்பத்தலைவிகளின் பொங்கல் கொண்டாட்டம்
என்ன தான் நகரத்தில் பொங்கல் கொண்டாடினாலும் கிராமத்தில் வீட்டுக்கு வர்ணம் பூசி, சாணம் தெளித்து, கோலமிட்டு, கரும்பு கட்டி, சூரியன் உதிக்கும் வேளையில் விறகு அடுப்பில், மண் பானையில் பச்சரிசியில் வெல்லம் கரைந்த சர்க்கரை பொங்கல் பொங்கி வழியும்போது 'பொங்கலோ பொங்கல்' என கூவி தைமகளை வரவேற்று மகிழ்வதில் ஈடு, இணை இல்லை. இந்த ஆண்டு சிறுதானிய பயிர்களுக்கான ஆண்டு என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே நகரிலும் கிராமத்து பொங்கலை கொண்டாடி, தமிழ் மண்ணின் பிறப்பான சிறு தானியத்தில் பொங்கலிடுவதே சிறப்பென கூறும் தினமலர் வாசகிகள் அதன் செய்முறையை விளக்குகிறார்கள்.தினை சர்க்கரை பொங்கல்கீதா: முதல் நாள் இரவு வாசலில் பல வண்ண கோலமிடுவதை இடுவதை இன்றும் தொடர்கிறோம். அதிகாலை பொங்கலிட்டு, கரும்பு தோரணம் கட்டி சுவாமி கும்பிடுவோம். அன்று 16 வகை காய்கறியில் கூட்டு, பொறியல் செய்வோம். கூட்டு, பொறியலை மறுநாள் அவியல் சமைத்து சாப்பிடுவோம். இம்முறை தினை சர்க்கரை பொங்கல் வைக்கிறேன்.தேவையான பொருட்கள்: தினை 1 கப், பாசிப்பருப்பு - கால் கப், தண்ணீர் நாலரை டம்ளர், பொடித்த வெல்லம் - 1 கப், ஏலக்காய் - 4, தேங்காய் துருவல் - கால் கப், முந்திரி பருப்பு 8.செய்முறை: தினை, பாசிப்பருப்பை கழுவி 30 நிமிடம் ஊற விடவும். பாத்திரத்தில், 1 டம்ளர்நீர் ஊற்றி பாசிப் பருப்பு கலந்து கொதிக்க விடவும். பருப்பு பாதி வெந்ததும் தினை சேர்த்து, நீர் ஊற்றி கிளறவும். வெல்லத்தை 5 நிமிடம் கொதிக்க விட்டு வடிகட்டி எடுக்கவும். தினை, பாசிப்பருப்பு வெந்து, குழைந்ததும் வெல்ல கரைசல், ஏலக்காய் துாள், நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து கிளறவும். சூடு குறைந்ததும் தேங்காய் துருவல் சேர்த்தால் தினை சர்க்கரை பொங்கல் ரெடி.குதிரைவாலி சர்க்கரை பொங்கல்சாந்தி: வீட்டுக்குள் பொங்கல் வைத்தாலும் அந்த பானையில் சந்தனம், குங்குமம் வைத்து, மஞ்சள் கொத்து கட்டும் முறையை தொடர்கிறோம். இளஞ் சூரியன் வரும் வேளையில் பொங்கல் வைத்து பூஜை செய்வோம். உருளை, கருணை, சேனை, சேம்பு என கிழங்கு வகைகளிலும் கூட்டு, வறுவல் செய்வோம். இம்முறை குதிரைவாலி சர்க்கரை பொங்கல் வைக்கிறேன்.தேவையான பொருட்கள்: குதிரைவாலி அரிசி - அரை கப், பயத்தம் பருப்பு - கால் கப், பால் - அரை கப், உப்பு, பச்சை கற்பூரம் தேவையான அளவு, வெல்லம் - ஒரு கப், ஏலக்காய் - 4, ஜாதிக்காய் சிறு துண்டு, சர்க்கரை - 2 ஸ்பூன், நெய் - 4 ஸ்பூன், முந்திரி, பாதாம் பருப்பு - 5.செய்முறை: பாத்திரத்தில் குதிரைவாலி, பருப்பு போட்டு, 2 கப் நீர், அரை கப் பால், உப்பு சேர்க்கவும். குக்கரில் 1 கப் நீரில் குதிரைவாலி, பருப்பு கலந்த பாத்திரம் வைத்து 3 விசில் வந்ததும், குறைந்த தீயில் 5 நிமிடங்கள் வேக விடவும். வெந்த அரிசி, பருப்பை கரண்டியால் மசிக்கவும். வெல்ல கரைசல் சேர்க்கவும். ஏலக்காய், ஜாதிக்காய் பொடி, ஊறவைத்து நறுக்கிய பாதாம் பருப்பு, நெய், சிறிது பச்சை கற்பூரம் சேர்த்தால் குதிரைவாலி சர்க்கரை பொங்கல் தயார்.