உள்ளூர் செய்திகள்

91 வயதிலும் ஒலிக்கும் சலங்கை - ஜொலிக்கும் வைஜெயந்திமாலா

சென்னை கலாஷேத்ரா நாட்டிய மையத்தில் இந்த டிசம்பர் கலைவிழாவின் துவக்க நடனம் நடிகை வைஜெயந்திமாலாவின் நடனமாக அமைந்தது. தற்போது 91 வயதாகும் வைஜெயந்திமாலாவின் பரத நாட்டியம் இன்னும் இரண்டு நிமிடத்தில் நடக்கவிருக்கிறது' என்ற அறிவிப்பை அடுத்து, அரங்கம் முழுவதும் ஆர்வம் பற்றிக் கொண்டது. அந்த இரண்டு நிமிடத்திற்குள் ஜையெந்தி மாலா பற்றிய சில குறிப்புகள். 1933ல் சென்னையில் பிறந்த வைஜெயந்திமாலாவின் தாய் வசுந்திரா தேவியும் நடிகைதான். அவரது அடியொற்றி திரையில் காலடி எடுத்துவைக்க பரதநாட்டியம் கற்றுக் கொண்டார். பின் பரதநாட்டியம்தான் அவரது வாழ்க்கையாகிப் போனது.தேன் நிலவு, வஞ்சிக்கோட்டை வாலிபன், இரும்புத்திரை, சித்துார் ராணி பத்மினி உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தவர் 'அவுட் லுக்' என்ற இந்திப் படத்தில் நடித்தபிறகு அகில இந்தியளவில் பிரபலமானார்.முதல் 'பான் இந்தியா நடிகை' இவரே என்று சொல்லலாம். இந்திய அளவில் பிரபலமான ஆறு நடிகைகளுள் ஒருவராக நீண்ட காலம் பவனி வந்தார். சுமன்லால் பாலி என்பவரை திருமணம் செய்து இவர்களுக்கு ஒரு மகள் உண்டு.அரசியலில் ஆர்வம் வர காங்கிரசில் சேர்ந்தார்; தென் சென்னையில் இரண்டு முறை வெற்றி பெற்று எம்.பி.,யாக இருந்தார். பின்னர் அக்கட்சியில்இருந்து விலகி பா.ஜ.,வில் சேர்ந்தார். இப்படி பல்வேறு 'முகங்களை' கொண்டிருந்தாலும் எந்தக் காலத்திலும் பரதநாட்டியத்தை மட்டும் விடவில்லை. 13 வயதில் பரத நாட்டிய அரங்கேற்றத்திற்கு கட்டிய சலங்கையை 91 வயது வரையிலும் கூட கழற்றவில்லை என்பதுதான் இவரது சிறப்பு. இவர் 90 வயதைத் தொட்டபோது அயோத்தி ராமர் கோயிலில் நடைபெற்ற நடன நிகழ்ச்சியில் பரதம் ஆடி வியக்கவைத்தார். அதன்பிறகு இதோ இப்போது மீண்டும் உங்கள் முன் பரதமாட வருகிறார் என்ற அறிவிப்பை அடுத்து திரை விலகியது. முழு பரத நாட்டிய உடையில் இருந்தாலும் பக்க வாத்தியக் கலைஞர்கள் பக்கத்தில் நாற்காலி போட்டுத்தான் அமர்ந்திருந்தார். எழுந்து நடனமாடவில்லை என்றாலும் வாத்திய ஒலிகளுக்கும் பாடல்களுக்கும் ஏற்ப முகத்திலும் கைகளிலும் அற்புதமாக பாவங்களை காட்டினார். கண்கள் பேசின. கைகள் ஆடின. ஒரு மணி நேரம் அப்படியே அமர்ந்து பரதத்தின் அத்தனை அம்சங்களையும் கண்முன்னே களிநடனம் செய்ய வைத்தார்.இந்த வயதில் இது சாதாரண விஷயம் அல்ல என்று அவையினர் பாராட்டினர். விழாகுழுவினர் பரிசு வழங்கியபோது மட்டும் மெல்ல எழுந்து மேடையின் மையத்திற்கு வந்து பரிசைப் பெற்றுக் கொண்டு பின் கைத்தாங்கலாக திரும்பிச் சென்றார். ஒரு கலையின் மீது பழம்பெரும் கலைஞர் வைத்திருக்கின்ற மதிப்பிற்கும், மரியாதைக்கும், அர்ப்பணிப்பு உணர்வுக்கும் இந்த காட்சிகள் சாட்சியாக அமைந்தன. - எல். முருகராஜ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்