உள்ளூர் செய்திகள்

பொத்தி வச்ச முல்லை முகத்தில் குத்தி வச்ச கல்லு மூக்குத்தி

''சின்னச் சின்ன மூக்குத்தியாம்...சிவப்புக் கல்லு மூக்குத்தியாம்...கன்னிப் பெண்ணே... உன் ஒய்யாரம் கண்டுகண்ணு சிமிட்டுற மூக்குத்தியாம்...'' என மூக்குத்தியின் பெருமையை, பாடல்கள் சொல்கின்றன.வெறும் அலங்காரப் பொருளல்ல, மூக்குத்தி.பெண்களின் உடலோடு, உணர்வோடு தொடர்புடையது. இந்தியப் பெண்களின் பாரம்பரியத்தோடு ஒன்றிய அடையாளச் சின்னம். வடஇந்தியப் பெண்கள் மூக்கின் இடப்பக்கத்திலும், தமிழகத்துப் பெண்கள் வலபக்கத்திலும் மூக்குத்தி அணிவதுண்டு. காலப்போக்கில், விருப்பப்பட்ட வகையில் வலதோ, இடதோ மூக்குத்தி அணிகின்றனர். தம்பதிகளாக நிற்கும் போது, மனைவியின் இடப்பாகமே கணவன் நிற்க வேண்டும். போட்டோ எடுக்கும் போதும், அப்படித் தான். இடதுபுறத்தில் மூக்குத்தி அணிந்தால், கணவனின் ஆயுள் அதிகரிக்குமாம். வயது வந்த பெண்கள் ஒற்றை மூக்குத்தி அணிந்தால் பெண்களின் மாதவிடாய் சீராகுமாம். திருமணத்திற்குப் பின், இருபக்கமும் மூக்குத்தி அணிவது நல்லது, கர்ப்பநாடியோடு தொடர்புடையதால், ஐந்து வயதுக்குள் இரட்டை மூக்குத்தி அணிந்தால், பிற்காலத்தில் சுகப்பிரசவம் நூறு சதவீதமாம். அதற்காக 20 வயதில் இரட்டை மூக்குத்தி அணிந்து, சுகப்பிரசவம் ஆகவில்லை என கூறக்கூடாது என்கின்றனர், மூக்குத்தி அணிந்த முதிய பெண்கள்.மூக்குத்தி விரும்பிகளிடம் கேட்காமல், முடிவுக்கு வரலாமா?

கல்லூரி மாணவி காமாட்சி:

ஆறாம் வகுப்பு படிக்கும் போது, மூக்குத்தி அணிந்தேன். சிலநாட்களில் தூர்ந்து போனதால், மீண்டும் பிளஸ்1 ல் குத்தினேன். கடந்த இரண்டாண்டுகளாக வைர மூக்குத்தி அணிந்துள்ளேன். என் அம்மாவின் முத்தன் தளுக்கு (தொங்கல்) வைரத்தில் ஜொலிப்பது அழகு. இப்போது போட்டோவிற்காக நான்கு வைரக் கல் மூக்குத்தி அணிந்துள்ளேன். மற்றபடி ஒற்றைக் கல் வைர மூக்குத்தி தான், எனக்கு பிடித்தது. திருமணத்திற்கு பின், இரட்டை மூக்குத்தியுடன் வலம் வருவேன், என்றார்.மூக்கை விட அகலமாய் இரட்டை மூக்குத்தி அணிந்த 65 வயது மூதாட்டி ஜெயலட்சுமி, 'வாவரசி (திருமணமான பின்) ரெண்டு மூக்குத்தி போட்டா தான், புருஷன் தீர்க்காயுசா இருப்பாக. ஒருமுறை மூக்குத்தி உடைஞ்சு போச்சு. கடைக்குப் போனா, பெரிய மூக்குத்தி கிடைக்கல. அதனால, மகன், மக பிள்ளைங்களோட விசேஷத்துக்கு கூட, வெளிய தலைகாட்டல. மூக்குத்தி இல்லாம வெறுமனே போக முடியாது. அப்புறந்தான், என் வீட்டுக்காரங்க, 'ஆர்டர்' கொடுத்து, செஞ்சு தந்தாங்க. ஒண்ணுல, 13 கல்லு, இன்னொண்ணு தங்கத்துல போட்டுருக்கேன். என் ஆயுசுக்கும் இந்த மூக்குத்தி நெலைச்சிருக்கணும், என்றார்.மூக்குத்தியைப் பற்றி தனியாக புத்தகம் இல்லாவிட்டாலும், பெண் தெய்வங்களை வர்ணிக்கும் போது, அவர்களது மூக்குத்தியும் வர்ணனையில் முக்கிய இடம் பெறும். இதற்கு பக்திப் பாடல்களே சாட்சி. மூக்குத்தி அணிந்தால், முகத்தின் அழகு கூடும் என்பது, இந்தக் கால இளசுகளின் 'லேட்டஸ்ட்' கண்டுபிடிப்பு.-எம்.எம்.ஜெ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்