உள்ளூர் செய்திகள்

THIS NUMBER CANNOT BE REACHED AT THE MOMENT

This number cannot be reached at the moment என்று அலைபேசியில் ஒலித்த குரலை இவர் 'டிக்டாக்கில்' 'இமிடேட்' செய்ததால் இவரது வாழ்க்கையே மாறி விட்டது. இவரது குரலுக்கு வாய்ப்புகள் பல தேடி வந்தன. இவர்தான் உதவிப்பேராசிரியர், செய்தி வாசிப்பாளர், டப்பிங் கலைஞர், நடிகை என பன்முக திறமைகளை கொண்ட கவிதா முருகேசன். தினமலர் பொங்கல் மலருக்காக பேசுகிறார்...''சொந்த ஊர் ஈரோடு. சிறு வயதிலேயே நாளிதழ்களை படிக்க ஆர்வமாக இருப்பேன். பள்ளியில் வாரம் ஒருமுறை வாசிக்க சொல்வார்கள். ஆனால் எனக்கு அந்த வாய்ப்பை தரமாட்டார்கள். என் சக மாணவியின் தந்தை ஒரு லோக்கல் சேனல் நடத்தி வந்தார். என் குரலை கேட்டு அவரது சேனலில் வாசிக்க வாய்ப்பு கொடுத்தார். எங்க வீட்டில் அப்போது 'டிவி' கிடையாது. ஒருசமயம் நாளிதழை சத்தம் போட்டு வாசித்தேன். பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் 'என்ன, உங்க வீட்டுல 'டிவி' வாங்கினதை சொல்லவே இல்லை. நியூஸ் சேனல் ஓடிட்டு இருக்கா'னு கேட்டார். 'இல்லை. நான்தான் வாசித்தேன்' எனசொன்னபோது ஆச்சரியப்பட்டார். அப்போது தான் எனக்குள் இருந்த குரல் எனக்கே கேட்டது.பிறகு 'கேபிள் டிவி'யில் செய்தி வாசித்தேன். அதை பார்த்து சேனல் ஒன்றில் வாய்ப்பு வந்தது. ஈரோட்டில் இருந்தே செய்தி வாசித்தேன். சென்னை சென்று 'டிவி' சேனல்களில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றினேன். ஆனால் பொருளாதார ரீதியாக எனக்கு 'செட்' ஆகாததால் மீண்டும் ஈரோடு திரும்பினேன்.அதேசமயம் படிப்பிலும் கவனமாக இருந்தேன். என் அப்பா முருகேசனுக்கு நான் பேராசிரியராக வரவேண்டும் என்பது ஆசை. அவரது ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகவே வணிகவியல் படித்தேன். வணிகத்தில் மார்க்கெட்டிங் குறித்து ஆய்வு செய்து முனைவர் பட்டமும் பெற்றேன். இதனால் எனக்கு கல்லுாரிகளில் பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது. அதேசமயம் என் கணவர் சீனிவாசன் மேலாளராக பணிபுரியும் பார்மா கம்பெனி சென்னைக்கு அவரை இடமாற்றியதால் நானும் என் இருமகன்களும் 2021ல் சென்னைக்கு குடிபெயர்ந்தோம்.தற்போது நான் தனியார் கல்லுாரி ஒன்றில் பேராசிரியையாக பணிபுரிகிறேன். ஓய்வு நேரங்களில் டப்பிங் கலைஞராக இருக்கிறேன். ஈரோட்டிற்கு ஒருமுறை நடிகர் ராதாரவி வந்தபோது என் குரலை கேட்டு, என்னை டப்பிங் யூனியனில் சேர அழைப்பு விடுத்தார். அதன்பேரில் 2022ல் யூனியன் மெம்பரானேன். இப்போது குறும்படங்கள், சீரியல்கள், விளம்பரங்கள், மாவீரன் உட்பட சில படங்களுக்கு குரல் கொடுத்தேன்.2021ல் தொடர்ந்து இடைவிடாமல் செய்தி வாசித்ததற்காக கின்னஸ் சாதனையும் படைத்தேன். வேதம் சொல் என்ற குறும்படத்தில் நடிக்க மகனுக்கு வாய்ப்பு வந்தது. அதன் இயக்குநர் 'அம்மா கேரக்டருக்கு யாராவது இருக்கிறார்களா' எனக் கேட்டார். நானும் சிலரிடம் கேட்டேன். திடீரென 'நீங்களே நடித்தால் என்ன' என்றுக்கூறி வாய்ப்பு தந்தார். அவர் சொல்லி தந்தாற்போல் நடித்தேன். சிறப்பாக இருந்ததாக கூறினார். இதன் பிறகே எனக்குள் நடிப்பு திறமையும் இருக்கிறது என்பதை புரிந்துகொண்டேன். வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. என் பேராசிரியர் பணி பாதிக்காமல் இருக்கும் வகையில் நேரம் ஒதுக்கி வருகிறேன்'' என இனிக்கும் குரலில் பேசுகிறார் கவிதா முருகேசன்.drmkavithaprofessor@gmail.com- கே. ராம்குமார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்