உள்ளூர் செய்திகள்

அரைத்த மஞ்சளில் இருக்குது ஆயிரம் அதிசயம்

மஞ்சள் குளித்து, பனியில் நனைந்து பரவசப் பொங்கல் கொண்டாடும், நம் தமிழ்ப் பண்பாட்டு பெண்கள், கொஞ்சம் கொஞ்சமாய் மாறி வருகின்றனர். மஞ்சள் பூசிய கிராமத்து குயில்கள்... ரசாயன 'கிரீம்' மோகத்தில், மஞ்சளை மறந்தனர். நாட்டு மருந்துக் கடைகளில், குவித்து வைக்கப்பட்டிருக்கும், பாரம்பரிய அடையாளங்கள் எல்லாம்... பன்னாட்டு நிறுவனங்களின் பாதுகாப்பில் சென்று விட்டன. அரைத்த மஞ்சளை பூசாமல், 'டியூப்புக்குள்' அடைத்திருக்கும், ரசாயன மஞ்சளுக்கு தவமிருக்கின்றனர், நமதருமைப் பெண்கள்.இருபது ஆண்டுகளுக்கு முன் வரை, இளம்பெண்களின் மஞ்சள் பூசிய முகத்தை பார்க்க முடிந்தது. இப்போதோ... நாற்பதைத் தொடும் நங்கைகள் கூட, நாசூக்காய் தவிர்த்து விட்டனர். தலைமுறை தலைமுறையாக மஞ்சளுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்கிறார், மதுரையைச் சேர்ந்த சுமதி.கஸ்தூரி மஞ்சள், பூலாங்கிழங்கு, ரோஜா இதழ், பாசிப்பயறு, பூசு மஞ்சள் (தேவைப்பட்டால்) ஒவ்வொன்றும் 100 கிராம் எடுத்து, காயவைத்து அரைக்க வேண்டும். முகம், கை, கால்களில் பூசினால் தங்கமாய் மினுமினுக்கும். தோல் சுருங்காது. பருக்கள், பித்தவெடிப்பு வராது. உடல் துர்நாற்றம் வீசாது. வெயிலின் தாக்கம் குறையும். எனது மகளுக்கும் மஞ்சள் பூசும் பழக்கத்தை கற்றுத் தந்துள்ளேன் என்கிறார், சுமதி. கருமைக்கு விடை சொல்லும் கஸ்தூரி மஞ்சள் எளிய முறையில் வீட்டில் உள்ள பொருட்களைப் பயன்படுத்தி, முகம் பொலிவு பெற வழிகாட்டுகிறார், மதுரை சாய்குமாரி அழகுக்கலை உரிமையாளர் குமாரி.* கஸ்தூரி மஞ்சள், பாசிப்பயறு, ரோஜா இதழ் சேர்த்து அரைத்து தினமும் முகத்தில் பூசினால், கருமை நிறம் மாறும்.* பனிக் காலத்தில் எண்ணெய்ப் பசை சருமம், சாதாரணமாகி விடும். சாதாரண, வறண்ட சருமம் மேலும் வறண்டு காணப்படும். * எண்ணெய்ப் பசை சருமம் உள்ளவர்கள் கஸ்தூரி மஞ்சளுடன் தயிர் கலந்து முகத்தில் பூசி 5 நிமிடம் கழித்து கழுவலாம்.* வறண்ட, சாதாரண சருமத்திற்கு கஸ்தூரி மஞ்சள், தேன், பாதாம் எண்ணெய் கலந்து பூசலாம். அல்லது கஸ்தூரி மஞ்சளுடன் பாலேடு கலந்து பூசலாம்.* முகம், கை, கால்களில் கருமை மாற தயிர், கடலை மாவு, எலுமிச்சை கலந்து பூசி 10 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும்.* ஒரு கிலோ சிகைக்காய், வெந்தயம், பாசிப்பருப்பு கால் கிலோ, காய்ந்த நெல்லி 100 கிராம், ஆவாரம்பூ, செம்பருத்தி பூ, இலை, கார்போக அரிசி 50 கிராம், பூந்தி கொட்டை 10 எண்ணிக்கை, அதிமதுரம், வெட்டி வேர் 10 கிராம். இவற்றை காயவைத்து மில்லில் அரைக்கலாம். தலையில் எண்ணெய் தடவி 10 நிமிடம் கழித்து, சிகைக்காய் குழைத்து 10 நிமிடங்கள் ஊறவைத்து, அலசினால் ஷாம்பூ தோற்றுவிடும்.* வறண்ட முடிக்கு, ஒரு கப் தண்ணீரில் ஒரு ஸ்பூன் பார்லி அரிசியை கொதிக்க வைத்து, வடிகட்டிய தண்ணீரை, குளித்தபின் கடைசியாக அலசினால் முடி பளபளக்கும்.* எண்ணெய்ப்பசை முடிக்கு, ஒரு கப் தண்ணீரில் அரை மூடி எலுமிச்சை பிழிந்து அலசவேண்டும். இப்படிச் செய்தால் முடி உதிராது, உடையாது, நரையும் சில ஆண்டுகள் தள்ளிப் போகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்