யானை மீது ஏறலாம்... மூங்கில் பரிசலில் பவனி வரலாம்
யானை சவாரி என்றால் எவருக்கும் குதுாகலம்தான்... அதுவும் இயற்கை சூழலில் யானை மீது சவாரி செய்வது என்பது ஒரு திரில்லான அனுபவம். யானை மீது சவாரி செய்வது சவாலானது என்று கருதலாம். ஆனால் அதன் மேல் ஏறிவிட்டால் அது ஆடி அசைந்து செல்லும் போது ஏற்படும் இன்பத்துக்கு அளவு கிடையாது.இதற்காக ரொம்பதுாரம் நீங்கள் சுற்றுலா செல்ல வேண்டாம். கன்னியாகுமரி மாவட்டத்திற்கு அருகே தமிழக-கேரள எல்லையில் ஒரு யானைகள் சரணாலயம் இருப்பது பலருக்கும் தெரியாது. திருவனந்தபுரத்தில் இருந்து 36 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது காப்புக்காடு. இங்குள்ள யானைகள் சரணாலயம் இயற்கையான சூழலில் அமைந்துள்ளது. கேரளாவில் வெள்ளம் ஏற்படும் போதெல்லாம் யானை குட்டிகள் மலை வெள்ளத்தில் அடித்து வரப்படுவது வாடிக்கை. இவற்றை வளர்த்து பராமரிக்க உருவாக்கப்பட்டதுதான் இந்த சரணாலயம். கேரளா சுற்றுலாத்துறை இதனை சுற்றுலா மையமாக மாற்றி விட்டது. யானைகளை பழக்கப்படுத்தி யானை சவாரி நடத்தப்படுகிறது. இரண்டரை வயது முதல் 60 வயது வரை உள்ள யானைகள் இங்குள்ளது. 300 ரூபாய் கட்டணம் செலுத்தினால் இங்கு யானை சவாரி செய்யலாம். நுழைவு கட்டணம் 20 ரூபாய். இங்குள்ள யானை குட்டிகள் காட்டும் சேட்டைகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்கிறது.ஆயிரம் ரூபாய் கட்டணத்தில் இங்கு தங்கும் அறை வசதி உள்ளது. இங்கு செல்லும் சுற்றுலா பயணிகள், மூங்கில் பரிசல் சவாரி மூலம் எட்டு கி.மீ. தொலைவில் உள்ள நெய்யாறு அணைக்கு செல்ல முடியும். இதற்கு கட்டணம் 100 ரூபாய். நெய்யாறில் விசாலமான தடாகத்தில் போட்டிங், லயன் சபாரி பார்க், மான் பார்க், முதலைப்பண்ணை, பூந்தோட்டம், அக்வேரியம் என பார்க்க வேண்டிய, அனுபவிக்க வேண்டியவை ஏராளம் உள்ளன. முதலை பண்ணையில் முதலைகள் கிலி ஏற்படுத்தும். மான்பூங்காவில் கூட்டமாக நிற்கும் மான்கள் பார்வையாளர்களை குதுாகலமடைய செய்யும்.மிகவும் நேர்த்தியாக பூங்கா பராமரிக்கப்படும் அணைக்கட்டுகளில் நெய்யாறும் ஒன்று.கேரளா சுற்றுலாத்துறையின் படகில் சென்று ஒரு தீவில் இறங்கிய பின்னர் வனத்துறையின் கண்ணாடி கூண்டு வேனில் அழைத்து செல்லும் போது கூண்டிற்குள் இல்லாமல் சிங்கங்கள் இயற்கையான சூழலில் நிற்பதை காண முடியும். படகு சவாரி, லயன்சபாரி பார்க்குக்கு 250 ரூபாய் கட்டணம்.கன்னியாகுமரிக்கு சுற்றுலா செல்வோர் அங்கிருந்து 120 கி.மீ.,துாரத்தில் இருக்கும் காப்புக்காடு மற்றும் நெய்யாறு சென்று திரும்பலாம். மேலும் விபரங்களை https://www.keralatourism.org/kerala என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.