உள்ளூர் செய்திகள்

கனவு + தேள் = புதையல்!

ஆலங்குளம் என்னும் கிராமத்தில் சங்கரன் என்றொருவன் வசித்து வந்தான். விவசாயத் தொழில் செய்து வந்த அவன் மிகவும் நற்குணம் படைத்தவன். எப்போதும் உழைத்துக் கொண்டே இருப்பான். அவன் மனதளவில் கூட யாருக்கும் எந்தத் தீமையும் செய்ய நினைக்காமல் வாழ்ந்து வந்தான்.ஒருநாள் இரவில் சங்கரன் உறங்கிக் கொண்டிருந்தான். அப்போது அவன் ஒரு கனவு கண்டான். கனவில் அவனது வீட்டுக் கூரையிலிருந்து வெள்ளிக் காசுகளும், தங்கக் காசுகளும் கொட்டின. சற்று நேரத்தில் கனவும் கலைந்து போனது.மறுநாள் வைகறைப் பொழுதில் வழக்கம் போல சங்கரன் எழுந்தான். இரவில் தான் கண்ட கனவு அவனுக்கு நினைவுக்கு வந்தது.'என்ன ஓர் அற்புதமான கனவு அது!' என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டான் சங்கரன்.கனவில் வெள்ளிக்காசுகளும், தங்கக் காசுகளும் கிடைத்தாலும் நிஜத்தில் அவன் ஓர் விவசாயிதானே!எனவே வழக்கம்போலவே, அவன் தன் வயலுக்குப் புறப்பட்டுச் சென்றான். இருப்பினும் இரவில் கண்ட கனவு அவன் நினைவில் வந்து கொண்டேயிருந்தது.சங்கரன் சற்று தூரம் சென்றான். வழியில் அவனது நண்பன் மூர்த்தி வந்து கொண்டிருந்தான். நண்பனைக் கண்டதும் சங்கரன் மகிழ்ந்தான்.சங்கரன் தன் நண்பன் மூர்த்தியிடம், ''மூர்த்தி உன்னைப் பார்த்தது மகிழ்ச்சி தருகிறது! உன்னிடம் ஒரு முக்கியமான செய்தி சொல்ல வேண்டும். நேற்று இரவில் நான் ஒரு கனவு கண்டேன். அக்கனவைப் பற்றி உன்னிடம் சொல்ல வேண்டும் என்று விரும்பினேன். நல்லவேளை நீயே எதிரில் வந்துவிட்டாய்!'' என்றான்.''அப்படியா? அப்படி என்ன கனவு கண்டாய். என்னிடம் சொல்லு!'' என்றான் மூர்த்தி.''நேற்று இரவு நான் கண்ட கனவில் என் வீட்டுக் கூரையிலிருந்து வெள்ளிக் காசுகளும், தங்கச் காசுகளும் கொட்டின!'' என்று கூறினான் சங்கரன்.சங்கரனைப் போல மூர்த்தி நற்குணம் கொண்டவன் அல்ல. அவன் துர்க்குணம் படைத்தவன். மேலும், அவனிடம் எல்லாரையும் கேலி செய்யும் குணமும் உண்டு.சங்கரன் கூறியதைக் கேட்டதும் உள்ளுக்குள் சிரித்துக் கொண்ட மூர்த்தி, அவனைக் கேலி செய்ய நினைத்தான்.எனவே சங்கரனைப் பார்த்து, ''ஆஹா! உனக்கும், எனக்கும் என்னவொரு ஒற்றுமை பார்த்தாயா? நேற்று இரவில் எனக்கும் ஒரு கனவு வந்தது. என் கனவில் தங்கக் காசுகள் கூரையிலிருந்து கொட்டவில்லை. நிலத்தின் அடியிலிருந்து புதையல் கிடைத்தது!'' என்று கேலியாகப் பொய் ஒன்றைச் சொன்னான்.மூர்த்தி கூறியதை உண்மையென்றே நம்பிவிட்டான் சங்கரன்.எனவே அவன் மூர்த்தியிடம், ''மூர்த்தி! இதுபோன்ற கனவுகள் உண்மையில் பலிக்குமா?'' என்று கேட்டான்.''சங்கரா! பலருக்கு இம்மாதிரியான கனவுகள் பலித்திருக்கிறது. எனவே நம்முடைய கனவும் பலிக்க வாய்ப்பிருக் கிறது!'' என்று கேலியாகச் சொல்லிவிட்டு சங்கரனிடம் விடைபெற்றுச் சென்றான்.நண்பனை அனுப்பிவிட்டு வயலுக்குச் சென்றான் சங்கரன். அவன் தன் ஏரைப் பூட்டி, தன் நிலத்தை உழத் தொடங்கினான். சிறிது நேரம் உழுதபின், எதிர்பாராதவிதமாக அவனது கலப்பை ஏதோவொரு கடினமாக பொருள் மீது மோதியது. கணீரென்ற சத்தம் எழுந்தது.சங்கரன் அந்த இடத்தை மேலும் நன்றாகத் தோண்டிப் பார்த்தான். அங்கே ஒரு பித்தளைக் குடம் தென்பட்டது.'அட! மண்ணுக்குள் பித்தளைக்குடமா? இந்தக் குடம் கனமாகவும் இருக்கிறதே! நிச்சய மாக இதற்குள் வெள்ளி, தங்கக் காசுகள்தான் இருக்க வேண்டும்' என்று மனதிற்குள் சொல்லியவாறு அதைத் திறக்க முயன்றான் சங்கரன்.அப்போது சற்று நேரத்திற்கு முன் தனது நண்பன் மூர்த்தி சொன்னது நினைவுக்கு வந்தது.'மண்ணுக்கு அடியிலிருந்து தங்கச் காசுகள் கிடைப்பதுபோல் கனவு கண்டதாகச் சொன்னவன் மூர்த்தி அல்லவா? என்னுடைய கனவில் கூரையில் இருந்தல்லவா தங்கக் காசுகள் கொட்டின. அப்படியானால் இந்தப் புதையல் மூர்த்திக்கு சொந்தமானது அல்லவா?'' என்று நினைத்தான் சங்கரன்.உடனே சங்கரன், மூர்த்தியின் வீட்டிற்குச் சென்றான். சங்கரனைக் கண்ட மூர்த்தி வெளியே வந்தான்.''மூர்த்தி! நான் என் வயலை உழுது கொண்டிருந்த போது மண்ணிலிருந்து ஒரு குடம் கிடைத்தது. அதில் தங்கக் காசுகள்தான் இருக்குமென்று தோன்றுகிறது. நிலத்திலிருந்து குடம் கிடைத்தால் அது உனக்குத்தான் சொந்தம்! நீதான் அதைப் பற்றி கனவு கண்டதாக என்னிடம் சொன்னாய்,'' என்றான்.சங்கரன் சொன்னதைக் கேட்ட மூர்த்திக்கு வியப்பாக இருந்தது.'சங்கரன் சரியான முட்டாளாக இருக்கிறானே... கனவில் வருவது எல்லாம் நனவிலும் நடக்கும் என்று நம்புகிறானே! சரி எப்படியோ அந்தப் புதையலை நாமே அபகரித்துக் கொள்வோம்!' என்று மனதில் நினைத்துக் கொண்டான் மூர்த்தி.எனவே அவன் சங்கரனிடம், ''நீ, சொல்வது சரிதான். அந்தப் புதையல் எனக்குச் சொந்த மானதுதான். நானே அந்தப் புதையலை எடுத்துக் கொள்கிறேன்,'' என்று சொன்னபடி சங்கரனின் வயலுக்கு சென்றான்.சங்கரன் சொன்ன இடத்தில் அந்தக் குடத்தைப் பார்த்தான் மூர்த்தி. குடத்தைத் தன் வீட்டிற்கும் எடுத்து வந்துவிட்டான்.வீட்டிற்கு வந்த மூர்த்தி குடத்தைத் திறந்தான். மறுநொடியில் அதிர்ச்சியில் குடத்தைக் கீழே போட்டு விட்டான். ஆமாம்! அந்தக் குடம் நிறைய தேள்கள் இருந்தன.'அய்யோ! நல்லவேளை இந்தத் தேள் களிடம் கடிபடாமல் தப்பித்தேன். சங்கரன் என் மீது ஏன் இவ்வளவு பாசம் காட்டினான் என்று இப்போதுதான் புரிகிறது. இதற்குள் தேள் இருக்குமென்று தெரிந்துதான் இந்தக் குடத்தை எனக்குக் கொடுத்தான் போலும். சங்கரனுக்கு சரியான பாடம் புகட்டுகிறேன்,'' என்று எண்ணிக் கொண்டான்.இரவுப் பொழுது வந்தது! மூர்த்தி மெதுவாக குடத்தை எடுத்துக் கொண்டு சங்கரனின் வீட்டை நோக்கி நடந்தான். யாரும் அறியாதபடி சங்கரன் வீட்டுக் கூரையின் மீது ஏறி, கூரையின் ஓட்டைப் பிரித்துப் பார்த்தான். சங்கரன் கீழே தரையில் படுத்து உறங்கிக் கொண்டிருப்பது தெரிந்தது.இதுதான் சரியான சமயம் என்று நினைத்த மூர்த்தி, குடத்தை அப்படியே சங்கரனை நோக்கிக் கீழே கவிழ்த்தான். கூடவே வாய் விட்டுச் சிரித்தபடியே, வீட்டினுள் என்ன நடக்கிறது என்று எட்டிப் பார்த்தான். ஆனால், வீட்டின் உள்ளே நடந்ததோ வேறு!ஏதோ 'கலகல' என்று விழும் சத்தம் கேட்டு உறங்கிக் கொண்டிருந்த சங்கரன் திடுக்கிட்டு எழுந்தான்.தான் கண்ட காட்சியை அவனால் நம்பவே முடிய வில்லை. ஆமாம்! கூரையி லிருந்து தங்கம் மற்றும் வெள்ளிக் காசுகள் கொட்டின. தான் காண்பது கனவா, நனவா என்பது புரியாமல் அவன் உரக்கக் கத்தினான்.''இதென்ன விந்தை?! மூர்த்தி சொன்னது போல நான் கண்ட கனவு பலித்து விட்டதே! மூர்த்திக்கு மண்ணிலிருந்து புதையல் கிடைத்தது போல, எனக்கு கூரையிலிருந்து தங்கக் காசுகள் கொட்டுகிறதே!'' என்று அவன் மகிழ்ச்சியில் சத்த மிட்டான்.நடந்தவை அனைத்தையும் கூரையிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த மூர்த்திக்கு வியப்பும், ஏமாற்றமும் ஒரு சேரத் தோன்றியது. அவன் தேள் என்று நினைத்து சங்கரனின் வீட்டிற்குள் கொட்டி குடத்திலிருந்து தங்கக் காசுகள் விழுந்து கொண்டிருந்தன.''ஐயோ! சங்கரன் கொடுத்த குடத்தின் மேல் பகுதியில் சில தேள்கள் இருந்தைப் பார்த்து ஏமாந்துவிட்டேனே... அவற்றின் அடியில் தங்கக்காசுகள் இருப்பது அறியாமல் இருந்து விட்டேனே...! சங்கரனை ஏமாற்ற நினைத்து நான் ஏமாந்து விட்டேனே!' என்று புலம்பினான் மூர்த்தி.'இனி என்னால் என்ன செய்ய முடியும்? என் குறுக்குப் புத்தியால் கைக்கு எட்டியது வாய்க்குக் எட்டாமல் போய்விட்டதே' என்று வருந்திய மூர்த்தி, ஏமாற்றத்தோடு தனது வீட்டிற்குத் திருப்பிச் சென்றான்.***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !