பிரேசில் நாட்டின் திராட்சை நம்மூர் மண்ணிலும் சாத்தியம்
ஜம்போடிகாபா பழம் சாகுபடி குறித்து, செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த விவசாயி பி.கிருஷ்ணன் கூறியதாவது:நம்மூர் கோடை வெயில் மற்றும் மழைக்கு ஏற்றவாறு, குளிர் மற்றும் வறட்சியான பிரதேசங்களில் விளையும் பலவித பழ மரங்களை சாகுபடி செய்யலாம்.அந்த வரிசையில், மாடி தோட்டம் மற்றும் விளைநிலத்தில், ஜம்போடிகாபா பழம் சாகுபடி செய்துள்ளேன். இது, பிரேசில் நாட்டில் விளையக்கூடிய திராட்சை வகை. இது, நம்மூர் மாடி தோட்டத்திற்கும் ஏற்றது. இந்த பழம் நம்மூர் திராட்சை பழத்தை போல இருக்கும். ஆனால், கொத்து கொத்தாக காய்க்காது. மரத்தில் ஒவ்வொரு பழமும் தனித்தனியாக காய்க்கும் தன்மை உடையது. இந்த பழங்கள் மாறுபட்ட சுவையுடன் இருப்பதால், சந்தையில் நல்ல வரவேற்பு மற்றும் கணிசமான வருவாய்க்கு வழிவகுக்கிறது. இந்த பழங்களில் இருந்து ஜெல்லி, ஜாம் உள்ளிட்டவற்றை தயாரிக்கலாம். இவற்றை மதிப்புக்கூட்டி விற்பனை செய்தால், அதிக வருவாய் ஈட்ட முடியும். இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு: பி.கிருஷ்ணன்,98419 86400.