மூன்றாண்டுகளில் மகசூல் தரும் சவுக்காட் ஆரஞ்சு ரக தென்னை
சவுக்காட் ஆரஞ்சு தென்னை சாகுபடி குறித்து, செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்த விவசாய பட்டயம் படித்த, செடிகள் உற்பத்தி செய்யும் விவசாயி பி.கிருஷ்ணன் கூறியதாவது:நம்மூர் கோடை வெயில் மற்றும் மழைக்கு ஏற்றவாறு, குளிர் மற்றும் வறட்சியான பிரதேசங்களில் விளையும் பழ மரங்களை சாகுபடி செய்யலாம்.அந்த வரிசையில், சவுக்காட் ஆரஞ்சு ரக தென்னை சாகுபடி செய்துள்ளேன். இது, மூன்று ஆண்டுகளில் மகசூல் கொடுக்கும் குறுகிய கால தென்னை ரகமாகும்.இந்த ரக தென்னை, இளநீர் உபயோகத்திற்கு மட்டுமே பயன்படுத்த முடியும். தேங்காய்க்கு பயன்படுத்த முடியாது. இந்த இளநீரின் சுவையும், மருத்துவ குணம் நிறைந்து இருப்பதால், சாகுபடி செய்ய பண்ணை விவசாயிகள் தயக்கம் காட்டுவதில்லை.குறிப்பாக, சவுக்காட் ஆரஞ்சு ரக தென்னை ஹைபிரீட் தென்னை ரகத்தைச் சேர்ந்தது இல்லை. இலங்கையை பூர்வீகமாக கொண்ட, நாட்டு ரக தென்னையாகும். இதை, கடற்கரையோர கிராமங்களில் உள்ள விவசாயிகள் அதிகம் சாகுபடி செய்கின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு: பி.கிருஷ்ணன்,94441 20032.