குளிர்ந்த கட்டமைப்பில் வளரும் கோவை - 2 ரக சிப்பி காளான்
கோவை - 2 ரக சிப்பி காளான் வளர்ப்பு குறித்து, திருவள்ளூர் மாவட்டம், திரூர் நெல் ஆராய்ச்சி மைய தாவர நோயியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் செ.சுதாஷா கூறியதாவது:திரூர் வேளாண் அறிவியல் நிலையத்தில், கோவை - 2 ரக சிப்பி காளான் வளர்த்து வருகிறோம். அதற்கு ஏற்ப, குளுமையான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி உள்ளோம்.காளான் வளர்பபை பொறுத்தவரையில், குளிர்ந்த சீதோஷண நிலைதான் முக்கியமாக உள்ளது. இந்த கட்டமைப்பை ஏற்படுத்தினால், 22 நாள் கழித்து முதல் அறுவடைக்கு தயாராகிவிடும்; 60 நாள் வரையில் ஒரு நாள் விட்டு, ஒரு நாள் காளான் அறுவடை செய்யலாம்.காளான் விதைகளை பாலித்தீன் கவர்களில் போடும் போது, அறுவடை இடைவெளி நாட்களுக்கு ஏற்ப, அடுத்த அடுத்த பாலித்தீன் கவர்களில் விதைக்க வேண்டும்.அப்போது தான், காளான் அறுவடை செய்வதற்கும், விற்பனை செய்வதற்கும் வசதியாக இருக்கும். இதன் வாயிலாக கணிசமான வருவாய் ஈட்டுவதற்கு வழி வகுக்கும்.இந்த கோவை - 2 ரக சிப்பி காளான், ஒரு பாலித்தீன் கவரில், 3.5 கிலோ வரையில் மகசூல் எடுக்கலாம். அதற்கு ஏற்ப, தரமான விதைகளை தேர்வு செய்து விதைக்க வேண்டும்.இது, பிற காளான் ரகங்களை காட்டிலும், 1 கிலோ கூடுதல் மகசூலாகும். சில நேரங்களில், விஷ காளான் வளர்வதையும் தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் காளான் வளர்ப்பில் கணிசமான வருவாய் ஈட்ட முடியும். இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு: முனைவர் செ.சுதாஷா,97910 15355.