முட்டை இடும் வாத்துகளுக்கு கலவை தீவனம் அவசியம்
முட்டை இடும் வாத்துகளுக்கு கலவை தீவனம் அளிப்பது குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், ஏனாத்துார் உழவர் பயிற்சி நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் கே.பிரேமவல்லி கூறியதாவது: விவசாயத்திற்கு அடுத்தபடியாக ஆடு, மாடு, கோழி, வாத்து ஆகிய கால்நடை வளர்ப்பு தொழில் பிரதானமாக உள்ளது. இதில், வாத்து வளர்ப்பு பிரதானமாக இருக்கிறது. முட்டை இடும் வாத்துகள்,140வது நாளில் இருந்து, முட்டை இட துவங்கும். இதுபோன்ற வாத்துகளுக்கு, தலா 170 கிராம் கலப்பு தீவனத்தை வழங்க வேண்டும். இந்த கலவை தீவனம் வழங்காமல் விட்டுவிட்டால், முட்டை இடுவதற்குள் வாத்து மெலிந்து இறக்கவும் நேரிடும். இதை தவிர்க்க, மக்காச்சோளம், கம்பு, கேழ்வரகு, நெல் தவிடு, கோதுமை தவிடு, சோயா பீன்ஸ் புண்ணாக்கு, எள்ளு புண்ணாக்கு, சூரியகாந்தி புண்ணாக்கு, கருவாட்டுத் துாள், இறைச்சி துாள், தாது உப்பு, கிளிஞ்சல் துாள் ஆகியவற்றால் கலவை தீவனம் தயாரிக்க வேண்டும். வாத்து ஒன்றுக்கு ஒரு வாரத்திற்கு 170 கிராம் என, தீவனமாக வழங்க வேண்டும். நாம், எத்தனை வாத்துகள் வளர்க்கிறோமோ அந்தனை வாத்துகளுக்கும் கலவை தீவனம் சரிசமமாக வழங்க வேண்டும். அப்போது தான், முட்டை வாத்து வளர்ப்பில், கால்நடை விவசாயிகள் நல்ல வருவாய் ஈட்ட முடியும். இவ்வாறு அவர் கூறினார். தொடர்புக்கு: கே.பிரேமவல்லி, 97907 53594.